தொல்.திருமாவளவனுடன் கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் சந்திப்பு
குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சுகாஸ் கனகரத்தினம், நடராஜர் காண்டீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தார்கள்.
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீளெழுச்சி பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படுகின்ற நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்தி, தமிழ்மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தருவதற்காக மத்திய அரசாங்கத்துக்கு காத்திரமான நடவடிக்கைகள் மூலம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறும் 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த தொல்.திருமாவளவன் அக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்திருந்த நிலையில் 15-11-2025 புன்னாலைக்கட்டுவனில் உள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரைச் சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சுகாஸ் கனகரத்தினம், நடராஜர் காண்டீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தார்கள்.
இந்த சந்திப்பின்போது, வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள், உட்;பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.
இச்சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 39 வருடங்களாகின்றது. ஆனால் அந்த ஒப்பந்தம் தற்போது வரையில் முடக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விடயங்களை அமல்படுத்தாமல் , ஒற்றையாட்சியின் கீழான 13ஆம் திருத்தம் என்கிற விடயம் மட்டுமே பேசப்படுகின்றது. இலங்கையின் மத்திய அரசாங்கம் அதற்கு அப்பால் உரையாடுவதற்கு தயாரில்லாத நிலையில் தான் செயற்பாடுகளை முன்னெடுகின்றது. இந்த விடயத்தில் மத்தியில் உள்ள சிங்கள, தேசிய அரசாங்களுக்கு இடையில் மாற்று நிலைப்பாடுகள் காணப்படவில்லை. இதனால் தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலைமைகள் தற்போது ஏற்பட்டள்ளன.
ஆகவே இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு இந்தியாவின் உதவி தேவையாக உள்ளது. தெற்கில் இந்தியாவை எதிர்த்தவர்கள் கூட பொருளாதார காரணிகளுக்காக இந்தியாவுடன் இசைந்து போகும் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் இந்திய மத்திய அரசு இலங்கையுடனான பேரம் பேசும் தன்மை தற்போது வலுப்பெற்றுள்ளது
இந்த நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சந்தித்த ஈழ தமிழர்கள் இந்த சந்தர்ப்பை பயன்படுத்த முடியும். அதனால் தொல். திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம்
தமிழகத்தின் ஆட்சியின் பங்காளியான அவர். ஈழ தமிழர்களின் விடயம் தொடர்பிலும், 13ஆம் திருத்தம் தொடர்பிலும் அதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். அதேபோன்று இலங்கையில் உள்ள சட்டங்கள் தொடர்பிலும் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம்.
தமிழக அரசு , ஈழ தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுக்க அவரின் ஒத்துழைப்பை மிக அவசியம். அதனை அவர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழினம் இனவழிப்புக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகிறது தற்போதைய சூழலில் உயிர்கள் பறிக்கப்படாது விடினும் எங்களுடைய இருப்பு இல்லாமல் போகிறது
பொருளாதார ரீதியாக தமிழ் தேசம் பலவீனமடைந்துள்ளது. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு, திட்டமிட்டு வேறு தரப்பினருக்கு மாற்றப்படுகிறது தமிழ் சிங்களம் முஸ்லிம் என்ற வேறுபாடு பேசாது நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவதாக கூறும் தற்போதைய அநுர அரசாங்கம் தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றது.
திட்டமிட்டு தமிழர்களை பலவீனப்படுத்தி வருகின்றனர். இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகம் ஈழ தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதும் தமிழ் மக்களுக்கு பலவீனமாக உள்ளது
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஈழ தமிழர்கள் விடயத்தில் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னெடுத்து, அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்துக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுக்க வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விசேடமாக, தமிழ் மக்களின் இருப்பு தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியமான அரணாக அமையும் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளோம் என்றார்.





