ஆளும்தரப்பு எம்.பி-பொலிஸ் உத்தியோகத்தர் மோதல் குறித்து பக்க சார்பின்றி விசாரணை
சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் பாதுகாப்பு கமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சூரியகந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களை மறுத்துள்ள பொலிஸ் தலைமையகம், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் 28-12-2025 அன்று பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கடந்த 20 ஆம் திகதி கொலொன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதன்போது, தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே கொலொன்ன பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்து, உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளைப் பொறுப்பேற்றதாகக் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக எம்பிலிப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர், சம்பவத்தைப் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் உத்தியோகத்தரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவர் என சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் பாதுகாப்பு கமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அனைத்து தகவல்களும் கடந்த 22 ஆம் திகதி அன்று எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது குறித்த உத்தியோகத்தர் பொலிஸ் தலைமையகத்தினால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எம்பிலிப்பிட்டிய கோட்ட குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொலொன்ன பொலிஸார் இணைந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.





