மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்திய குடியுரிமை வழங்குங்கள் - தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்து
இந்திய தூதரகத்தில் 1946 ஆம் ஆண்டு முதல் செயல்படும் நிறுவனமான இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை என்பதை மறுசீரமைக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் தூதரக கல்வி அறக்கட்டளையை தற்கால வளர்ச்சிக்கு ஏற்ப மறுசீரமைக்க வேண்டும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இந்திய தூதர் சந்தோஷ் ஜாவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்திய தூதர் சந்தோஷ் ஜா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு இடையில் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் 03-03-2026 அன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் குழு உறுப்பினர் சர்வதேச துறைக்கான ஐக்கிய மக்கள் முன்னணி உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய தூதரகம் சார்பாக அரசியல் துறை கவுன்சிலர் ராம் பாபுவும் இதில் பங்கேற்றார்.
இந்த சந்திப்பின் போது சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து மனோ கணேசன் தெரிவிக்கையில்; இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் ஒட்டுமொத்த ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சமாகும். இதில் பத்து இலட்சம் பேர் தோட்டப் பகுதிகளில் வாழ்ந்தாலும் இன்று ஒரு இலட்சம் பேர் மட்டுமே நேரடி தோட்ட தொழிலாளர்களாக தொழில் செய்கிறார்கள். ஏனையோர் தங்களது சுய முயற்சியால் பல்வேறு தொழில் வர்த்தக துறைகளில் முன்னேறி இன்று ஒரு தேசிய சிறுபான்மை இனமாக உருமாற்றம் அடைந்துள்ளனர். இவர்களின் இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தை மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. பாரத தேசத்திற்கு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மீது ஒரு பாரிய தார்மீக கடப்பாடு உள்ளது. அதன் காரணமாகவே நாம் இந்த சந்திப்பை முன்னெடுத்துள்ளோம்.
இந்த பின்னணியில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அவர்கள் விரும்பினால் இலகுவான தகுதி அடிப்படையில் கடல் கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து வழங்குவதை இந்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். இத்தொடர்பில் மொரீஷியஸ் நாட்டிற்கு பொருந்தும் குடியுரிமை கட்டமைப்பு முறையை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். கொழும்பிற்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான பதிலை அவர் வழங்கியிருந்தார்.
தென்னாப்பிரிக்கா மொரீஷியஸ் பிஜி சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி சமூகங்கள் வலுவான சமூக பொருளாதார முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ஆனால் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக பின்னடைவை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக 1964 ஆம் ஆண்டின் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய நலன்களை முன்னிறுத்தி செய்யப்பட்டாலும் அது இலங்கையின் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மக்களின் வரலாற்றை அங்கீகரிப்பதுடன் கல்வி தொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
மேலும் இந்திய தூதரகத்தில் 1946 ஆம் ஆண்டு முதல் செயல்படும் நிறுவனமான இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை என்பதை மறுசீரமைக்க வேண்டும். இன்று நமது சமூகம் தோட்டங்களை தாண்டி வளர்ச்சி அடைந்துள்ளதால் இதனை இந்திய வம்சாவளி தமிழர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை என்ற பெயரில் விரிவுபடுத்த வேண்டும். இந்திய அரசின் நிதி ஆதரவு பெற்ற அனைத்து புலமைப்பரிசில் மற்றும் கல்வி வளர்ச்சி திட்டங்கள் இந்த புதிய அறக்கட்டளை மூலமே நடைபெற வேண்டும்.
இந்த புதிய கல்வி அறக்கட்டளையின் மூலம் பின்வரும் ஐந்து முக்கிய திட்டங்களை முன்னெடுக்க கோருகிறோம்.
1. கல்வி புலமைப்பரிசில் தொகையையும் அதன் எண்ணிக்கையையும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அதிகரித்தல்.
2. மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க கணிதம் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களை உருவாக்க தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி கலாசாலையை நிறுவுதல்.
3. மலையக தமிழ் பெண்களுக்காக பிரத்தியேக தாதியர் பயிற்சி நிறுவனத்தை அமைத்தல்.
4. இலங்கை சட்டப்படியும் இந்திய நவோதயா பள்ளிகள் முறைப்படியும் கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் இரண்டு சர்வதேச ஆங்கில மொழி மூல பள்ளிகளை நிறுவுதல்.
5. நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்நாட்டின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலையக பல்கலைக்கழக வளாகத்தை நிறுவி எதிர்காலத்தில் இதனை முழுமையான தேசிய பல்கலைக்கழகமாக வளர்த்தல்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய விரிவான எழுத்து மூல ஆவணங்கள் ஏற்கனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் முன்னாள் தூதர் கோபால் பாக்லே ஆகியோரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகளை ஏற்று அவற்றுக்கு உரிய தீர்வுகளை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்கு இலங்கைக்கான இந்திய தூதராகிய உங்களின் அறிவார்ந்த பங்களிப்பும் அவசியம் என மனோ கணேசன் இந்திய தூதரிடம் வலியுறுத்தியுள்ளார்.





