பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை - விஜயதாச ராஜபக்ஷ
விசாரணைகள் நடத்தப்படுவதற்குக் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக இந்தச் சட்டத்தின் கீழ் இடம்பெறுவதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்களுக்கே எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு எண்ணமும் இல்லை என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு அவ்வாறு செய்வதற்கு உண்மையான விருப்பம் இருந்திருந்தால், தான் முன்னர் அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : பாராளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது, தற்போதைய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரியிருந்தனர்.
இது குறித்த கடந்த அரசாங்கங்களின் பாராளுமன்ற விவாதமமொன்றில், போரற்ற ஒரு நாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் தேவை இல்லை என்று தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அன்று வாதிட்டதுடன், நடைமுறையிலுள்ள சட்டத்தை ஒழிக்குமாறு கோரியிருந்தார்.
ஆனால் அரசாங்கம் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கடுமையான நிலைமைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அதற்கு சிறந்த உதாரணமாகும்.
விசாரணைகள் நடத்தப்படுவதற்குக் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக இந்தச் சட்டத்தின் கீழ் இடம்பெறுவதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்களுக்கே எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.
விசாரணை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போதும் கூட, அதனை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதில் திருத்தம் செய்வதற்கு எதுவும் மிச்சமில்லை. இந்தச் சட்டத்தை நீண்ட காலத்துக்கு தக்கவைத்துக் கொள்வதற்காகவே குழுக்கள் நியமிக்கப்படுகின்றன என்றார்.





