நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு: பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் பேரவை தீர்மானம்
முறையான சட்டக் கட்டமைப்பையும் நிலைநிறுத்துவதற்கு சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நீதித்துறை மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் பேரவை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகத் தீர்மானமொன்றையும் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் பேரவையின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, பாரிஸில் நடைபெற்ற பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்தீர்மானத்தில் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்யும் ஒரு முயற்சியாகப் பொதுமக்களால் பார்க்கப்படக்கூடும் என சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கையை அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளது.
அதேபோன்று சட்டத்தரணிகள் சங்கத்துக்கு ஆதரவாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்தும் தமது தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ள பேரவை, சட்டத்தின் ஆட்சியையும் முறையான சட்டக் கட்டமைப்பையும் நிலைநிறுத்துவதற்கு சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நீதித்துறை மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் இவ்விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பேரவை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவது குறித்து முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளவேண்டாம் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.





