மாதத்திற்கு 50 மில்லியன் டொலர் இழக்கும் அபாயம் - தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம்
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேயிலை ஏற்றுமதியிலிருந்து 121.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளதுடன், இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீத உயர்வாகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த மோதல்கள் காரணமாக அந்தப் பகுதிக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சங்கம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி குறைந்ததன் விளைவாக வாரத்திற்கு 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வருவாய் இழப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு சுமார் 125 மில்லியன் கிலோகிராம் சிலோன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலம் சுமார் 750 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் ஈராக், ஈரான், லிபியா, துருக்கி, சவுதி அரேபியா, சிரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய தேயிலை இறக்குமதி நாடுகளாக உள்ளன. கடல் மார்க்கங்கள் மூலம் தேயிலை ஏற்றுமதி செய்வதற்கு முடிந்தாலும், அதிகரித்துள்ள கப்பல் கட்டணங்களின் காரணமாக இந்த நாடுகளிலுள்ள வாங்குபவர்கள் தற்போது தேயிலை இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
தேயிலை வழங்குவதற்காக ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே பல கோரிக்கை விடுத்திருந்தாலும், கொடுப்பதில் சிக்கல்கள் மற்றும் யுத்த அபாயம் காரணமாக அவற்றை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான முக்கிய கடல் போக்குவரத்து பாதைகள் ஹோர்முஸ் நீரிணை மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக அமைந்துள்ளன. சுயஸ் கால்வாயில் தடைகள் எதுவும் இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த இரு கடல் பாதைகளும் தற்போது பிரதான கப்பல் போக்குவரத்து வழிகளாக பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதிக்கான தேயிலை ஏற்றுமதி பெருமளவில் தடைப்பட்டுள்ளது.
யுத்த மோதல்கள் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அந்தப் பிராந்தியத்தின் சில துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. பின்னர் மார்ச் 4 ஆம் திகதி முதல் சில கடல் பாதைகளில் வரையறுக்கப்பட்ட அளவில் கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. அதன்படி, 20 அடி கெண்டெய்னருக்கு சுமார் 1,800 அமெரிக்க டொலரும், 40 அடி கெண்டெய்னருக்கு சுமார் 3,000 அமெரிக்க டொலரும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
இந்த யுத்த நிலைமை இன்னும் சில வாரங்கள் நீடித்தால் அது தேயிலை ஏல சந்தையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் தேயிலை கொள்முதல் குறைக்கப்பட்டால் சிறு அளவிலான தேயிலை தோட்ட உரிமையாளர்களின் வருமானம் நேரடியாக பாதிக்கப்படும் அபாயமும் இருக்கின்றது.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேயிலை ஏற்றுமதியிலிருந்து 121.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளதுடன், இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீத உயர்வாகும்.
இவ்வாண்டு பெப்ரவரி மாதத்திற்கான புள்ளிவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், கடந்த ஆண்டுக்கு சமமாக அல்லது அதைவிட அதிகமாக இருக்கலாம் என தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.





