விமல் வீரவன்ச, தனது மனைவி ,சகோதரருக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்பட்டபோது ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை?
விசாரணைகளை வேறு விதத்தில் திசை திருப்புவதற்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
சுரேஷ் சலேவுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்பட்டபோது கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச, தனது மனைவி மற்றும் சகோதரருக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்பட்டபோது ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-06-2026 அன்று இடம்பெற்ற மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக தயாசிறி ஜயசேகர எம் பி சபையில் தெரிவித்தார்.ஆனால் அவரது பெயருக்கு முன்னால் 'வழக்கறிஞர்' என்ற ஒரு பதவிப் பெயர் உள்ளது. அப்படிப்பட்ட ஒருவர் அத்தகைய அறிக்கையை வெளியிடும்போது, அதை அவர் பொறுப்புடன் வெளியிட வேண்டும். முடிந்தால், பாராளுமன்றத்துக்கு வெளியே சென்று இதுபோன்ற விடயங்களைக் கூற வேண்டும்.
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டால், ஏன் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இவர்கள் செல்லவில்லை? விமல் வீரவன்சவின் மனைவிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரருக்கு வெளிநாட்டுப்பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எதிரான தண்டனைக்காக இவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்வதில்லை. சட்டம் அமல்படுத்தப்படுவதால், சலேவுக்கு ஆதரவாக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். அரசியல் லாபங்களை பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் இதைச் செய்கிறார்கள். விசாரணைகளை வேறு விதத்தில் திசை திருப்புவதற்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், பெரும்பான்மையான மக்களை அவர்களது செயற்பாடுகளால் ஏமாற்ற முடியாது. இன்று சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதால், நாட்டு மக்கள் செய்த தியாகங்களுக்கு பெறுமதி கிடைத்துள்ளது என்றார்.





