அரசாங்கம் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கிறது - பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா
இந்த தீர்மானத்தை எடுக்க முன்னர் நீதி அமைச்சில் எப்போது இதற்காக ஒரு குழு கூடியது?
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானதாகும். அந்த காலப்பகுதியில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் 29-07-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முதலாவதாக, 2015, 2016, 2017 காலப்பகுதியில் இவ்வாறானதொரு யோசனை இருந்ததாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கைதான் அதற்குப் பிறகு அதிகரிக்கப்பட்டதே தவிர, ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படவில்லை; எண்ணிக்கையை அதிகரித்ததற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதை தவிர நீதிமன்றத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று எந்தவொரு பரிந்துரையும் 2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்படலில்லை.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகள் மட்டுமே இருந்தன, அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேபோல் நீதிமன்ற முறைமைச் சட்டத்தைச் திருத்தி, மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தோம். இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட திகதியை இலக்கு வைத்துத் தொடங்கப்பட்டது.
அந்த குறிப்பிட்ட திகதியைக் கவனிக்கும் போது, இது ஒரு தனிநபரை இலக்கு வைத்தது என்பது தெளிவாகிறது. தனிநபரை இலக்கு வைத்த அரசியலமைப்புத் திருத்தம் எனக் கடுமையாக விமர்சிக்கப்படும் போது, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாத்திரமின்றி அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது.
முழு அரசியலமைப்பையும் மாற்றுவதற்குத்தான் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அந்த புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கும் ஏற்ப நீதியரசர்கள், நீபதிகளின் எண்ணிக்கை குறித்து முறையாக விவாதித்து இறுதி முடிவை எடுக்க முடியும்.
இந்த தீர்மானத்தை எடுக்க முன்னர் நீதி அமைச்சில் எப்போது இதற்காக ஒரு குழு கூடியது? பாராளுமன்றத்தின் நீதிச் விவகார ஆலோசனைக் குழு கூடி இதுபற்றிப் பேசிப் பரிந்துரைகளைப் பெற்றதா? ஒரு சட்டத்தைத் திருத்தப் பேசும்போதெல்லாம் சட்ட ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று கூறும் நீதி அமைச்சர், இந்த விவகாரத்தில் அந்த நடைமுறையை பின்பற்றினாரா?
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிய நாளுக்கு முன்னதாகவே, இந்த வரைவு தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை அங்கீகாரமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்ன?
அரசியலமைப்பின் 107 வது பிரிவில் உள்ள அனைத்து விதிகளும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே அந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான இந்த விதிகளில் கைவைக்கவில்லை. அவருக்குப் பின்வந்த எந்தவொரு ஜனாதிபதியும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான இந்த விதிகளில் கைவைக்கவில்லை.
ஒரேயொரு மாற்றம் மட்டுமே நடந்தது; அலி சப்ரி அமைச்சராக இருந்த காலத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட திருத்தம் மட்டுமே அது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஏனெனில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியான விடயம் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது.
நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீரழிக்கும், ஒரு தனிநபரை இலக்கு வைக்கும், நீதித்துறை சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் இந்த அர்த்தமற்ற திருத்தத்தைக் கொண்டுவரும் பாவச் செயலில் பங்கேற்க வேண்டாம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





