‘அரகலய', மற்றும் அதன் நிதி மூலங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள்
அரகலய என்ற போர்வையில் சிலர் தமது தனிப்பட்ட அரசியல் இலக்குகளை அடைவதற்காக ஒரு உயிரைப் பலிகொடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடிகளின் போது முன்னெடுக்கப்பட்ட 'அரகலய' மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும் நிதி குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரகலய என்ற போர்வையில் சிலர் தமது தனிப்பட்ட அரசியல் இலக்குகளை அடைவதற்காக ஒரு உயிரைப் பலிகொடுத்துள்ளனர். ஒரு குழுவினர் தந்திரமாக இளைஞர்களை தூக்குமேடைக்கு அனுப்பியுள்ளனர். அன்று பிரதான ஊடகங்களில் தோன்றி, மக்களை வீதிக்கு வந்து தாக்குதல் நடத்துமாறு தூண்டிவிட்டு, விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்பதாக உறுதியளித்தவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி செயல்பட்ட இளைஞர்களோ இன்று தூக்குமேடையைச் சந்தித்துள்ளனர்.
வெளிநாட்டு நிதியுதவிகள் மற்றும் இந்தத் தூண்டுதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முறையான விசாரணை அவசியமாகும். எனவே 'அரகலய' போராட்டங்கள், அவற்றுக்கான நிதி மூலங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாமல் ராபக்ஷ இதன் போது கோரிக்கையை முன்வைத்தார்.





