உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பிராந்திய முயற்சிகளுக்கு வலுவான பங்களிப்பு
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் 38 ஆவது மாநாடு இவ்வாரம் 20 - 24 ஆம் திகதி வரை புரூணையின் தருஸலாமில் ஆசிய, பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வலுவான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் போசணை மிகுந்த உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பிராந்திய முயற்சிகளுக்கு வலுவான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் 38 ஆவது மாநாட்டில் இலங்கை உறுதியளித்துள்ளது.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் 38 ஆவது மாநாடு இவ்வாரம் 20 - 24 ஆம் திகதி வரை புரூணையின் தருஸலாமில் ஆசிய, பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் மேலோங்கிவரும் விவசாயத்துடன் தொடர்புடைய ஆக்கபூர்வமான திறன்களைப் பயன்படுத்தி அனைவருக்குமான உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்வதும், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தின் மூலம் விவசாயிகள் நன்மையடைவதை உறுதிசெய்வதுமே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
அதன்படி இம்மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்வில் உரையாற்றிய புரூணை இளவரசர், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிப்பதற்குப் பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
அதேவேளை உணவுப்பாதுகாப்புசார் நெகிழ்ச்சித்தன்மையைப் பிராந்தியத்துக்கு உள்ளிருந்தே உருவாக்கவேண்டும் என்றும், பிராந்திய நாடுகளின் கூட்டு விருப்பமின்றி எந்தவொரு வெளியக உதவியும் நிலையானதாக இருக்காது என்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இயக்குநர் நாயகர் கியூ டோங்யு சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று இம்மாநாட்டில் நிகழ்நிலை முறைமை ஊடாகக் கலந்துகொண்ட விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, காலநிலை மாற்றம், சந்தைத் தளம்பல்கள் மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை என்பன உள்ளடங்கலாக அதிகரித்துவரும் சவால்களைக் கையாளக்கூடியவகையில் நிலையானதும், நெகிழ்ச்சியானதுமான விவசாய மற்றும் உணவுப்பாதுகாப்பு முறைகளைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
அத்தோடு உற்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துதல், இறக்குமதிகளில் தங்கியிருப்பதைக் குறைத்தல் மற்றும் விவசாய சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இல்ஙகை முன்னுரிமை அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.





