நீதித்துறை சட்டமூலம் ஜனவரிக்குள் நிறைவேற்றினால் அரசியலிலிருந்து வெளியேறத் தயார் : சுஜீவ சேனசிங்க
மாகாண சபை தேர்தல்களை வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
அரசாங்கம் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய நீதித்துறை சட்டமூலத் திருத்தங்களை நிறைவேற்றினால், உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அரசியலையே கைவிடத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 21-07-2026அன்று ஐக்கிய மக்கள் சக்தி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் உத்தேசித்துள்ள சர்ச்சைக்குரிய நீதித்துறை சார்ந்த சட்டமூலத் திருத்தங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்றிக் காட்டினால், தாம் உடனடியாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அரசியலை விட்டே முற்றிலும் வெளியேறத் தயார். நாட்டின் 200 ஆண்டுகால பழமையான சட்ட அமைப்பையும், சுயாதீன நிறுவனங்களின் தன்னாட்சியையும் சீர்குலைப்பது, ஜனநாயகத்தைப் புதைப்பதற்குச் சமம் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மேலும், அரசாங்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். நீதித்துறை மற்றும் அரச நிறுவனங்களின் சுயாதீன தன்மை பேணப்பட வேண்டும் என்பதுடன், அரசியல் தலையீடுகள் இன்றி அனுபவ அடிப்படையில் மட்டுமே நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.





