ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியின் முக்கிய ஆலோசனைகளைக் கேலி செய்துள்ளனர் - திஸ்ஸ அத்தநாயக்க
மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்துப் பெறப்பட்டபோது, நாட்டில் எந்தவொரு பொதுமகனும் கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை.
அரசாங்கம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக மின்சாரக் கட்டணத்தை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் விலை உயர்கிறது என்பதற்காக மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு ஓர் அரசாங்கம் தேவையில்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியின் முக்கிய ஆலோசனைகளைக் கேலி செய்துவிட்டு நாட்டைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சுமத்தினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 31-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலை உயரும்போது மக்கள் மீது பாரிய சுமை சுமத்தப்படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எரிபொருள் மீது அரசாங்கம் விதித்துள்ள வரிகளைத் தற்காலிகமாகவாவது நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் வரிகளைக் குறைத்து மக்களுக்குச் சுமையைக் குறைத்துள்ளன.
உலக சந்தையில் விலை உயர்கிறது என்பதற்காக மக்களிடமும் விலையை உயர்த்திக் கொண்டே செல்வதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை. அவ்வாறான நெருக்கடி நிலைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமையாகும். மேலும், சஜித் பிரேமதாச தலைமையிலான எமது தரப்பு ஆட்சியில் இருந்திருந்தால், பொருளாதாரப் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க இத்தகைய வரி நீக்கங்கள் போன்ற நேரடித் தலையீடுகளைச் செய்திருப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்துகின்றது. சஜித் பிரேமதாச பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நாட்டின் நலன் கருதி பல ஆலோசனைகளை முன்வைத்தாலும், அரசாங்கம் அவற்றை உள்வாங்கத் தயாராக இல்லை. உதாரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பாகப் பேசும்போது, மக்கள் மீது அதிக சுமை விழாதவாறு நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு நாணய நிதியத்துடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
ஆனால் அரசாங்கமோ அந்த ஆலோசனைகளைக் கேலி செய்து நிராகரித்துவிட்டு, இன்று நாட்டை மேலும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அனைத்துக் கருத்துக்களையும் அரசாங்கம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை என்றாலும், அவற்றில் இருக்கும் யதார்த்தமான மற்றும் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய நல்ல ஆலோசனைகளைப் பயன்படுத்தி அரசாங்கம் செயல்பட்டிருந்தால் மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை பயத்திருக்கும்.
புத்தாண்டு நெருங்கும் வேளையில் அரசாங்கம் மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக மின்சாரக் கட்டண உயர்வை வழங்கியுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், இந்த மின்சாரக் கட்டண உயர்வு மக்களின் முதுகெலும்பை உடைப்பதாக உள்ளது. மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்துப் பெறப்பட்டபோது, நாட்டில் எந்தவொரு பொதுமகனும் கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை.
ஆனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், தனது தன்னிச்சையான முடிவின் மூலம் கட்டணங்களை பாரிய அளவில் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வினால் நடுத்தர வர்க்கத்தினரும், நாட்டில் உள்ள சுமார் 52 இலட்சத்திற்கும் அதிகமான சாதாரண மின் நுகர்வோரும் நேரடியாகவும் மிகக் கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.





