பேரனர்த்தத்தினால் 272, 536 பேர் இடம்பெயர்வு: சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தகவல்
வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 47 பேரும், கிளிநொச்சியில் 4 பேரும், மன்னாரின் 435 பேரும் வவுனியாவில் 60 பேரும் இடம்பெயர்ந்திருப்பதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலையில் 41 494 பேரும், இரத்தினபுரியில் 19 399 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
'தித்வா' சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 72 ஆயிரத்து 536 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினரை கம்பஹா, மாத்தறை, கேகாலை மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் மீள்குடியமர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பேரனர்த்தத்தினால் சுமார் 18 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் தமது வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து, தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி இவ்வனர்த்தத்தின் விளைவாக உள்நாட்டில் பதிவான இடப்பெயர்வுகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை சர்வதேச புலம்பெயர்வு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகள் கடந்த 17 - 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும்.
இத்தரவுகளின்படி பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 இலட்சத்து 88 ஆயிரத்து 572 ஆகும். கடந்த 12 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இத்தொகையில் 3 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று 2 இலட்சத்து 72 ஆயிரத்து 536 பேர் இடம்பெயர்ந்திருப்பதுடன் அவர்களில் 19 சதவீதமானோர் பாதுகாப்பு நிலையங்களிலும், 81 சதவீதமானோர் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட சமூக மட்டத்திலான தங்குமிடங்களிலும் தங்கியுள்ளனர்.
அதேவேளை தற்போது நாடளாவிய ரீதியில் 723 பாதுகாப்பு நிலையங்கள் இயங்கிவருவதுடன் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 283 வீடுகள் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்துள்ளன.
மேற்குறிப்பிட்டவாறு இடம்பெயர்ந்திருப்போரின் எண்ணிக்கையை மாவட்ட ரீதியாக நோக்குமிடத்து, மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் முறையே 79 053, 25 739, 34 008 பேரும், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முறையே 444, 44, 42 பேரும், வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் முறையே 980, 119 பேரும், வடமேல் மாகாணத்தின் குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் முறையே 825, 2 673 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்தோடு வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 47 பேரும், கிளிநொச்சியில் 4 பேரும், மன்னாரின் 435 பேரும் வவுனியாவில் 60 பேரும் இடம்பெயர்ந்திருப்பதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலையில் 41 494 பேரும், இரத்தினபுரியில் 19 399 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி தென்மாகாணத்தின் காலி, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முறையே 4, 20, 4 பேரும், ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் முறையே 42 791, 152 பேரும், மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 23 125, 1 070, 4 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினரை கம்பஹா, மாத்தறை, கேகாலை மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் மீள்குடியமர்த்தி, வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவசியமான காணி உரிமையை அவர்களுக்கு வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.





