நாட்டின் பல பகுதிகளில் தற்காலிக மின்வெட்டு
தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் சமநிலையின்மை காரணமாகவே கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.
தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையின்மையால் ஏற்பட்ட தடை சில மணித்தியாலங்களில் வழமைக்குத் திரும்பியது
தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத சமநிலையின்மை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை தற்காலிகமாக மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. எனினும் உடனடியான அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் சில மணித்தியாலங்களின் பின்னர் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு பின்னர் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.
நாடு முழுவதும் நேற்று சனிக்கிழமை மின்சார விநியோகம் தடைப்பட்டமை குறித்து மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க கருத்து தெரிவிக்கையில், 'தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் சமநிலையின்மை காரணமாகவே கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது. மின் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிகையாகவே இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டது.' என்று அவர் விளக்கமளித்தார்.





