அரசாங்கத்தின் வரிச்சுமைக்கு எதிராக உலக வர்த்தக மையத்தை முற்றுகையிட்ட மக்கள் போராட்ட இயக்கம்
பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைக் கடந்தபோது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
பொருட்களின் விலை உயர்வு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு மக்களுக்கு பெரும் பொருளாதார துயர நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மீது வரி விதித்து, மக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள் என எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று கொழும்பில் பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்குக்கு முன்பாக 25-06-2025அன்று மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இப்பேரணியில், முன்னிலை சோசலிசக் கட்சி, சுகத்துக்காக பெண்கள் இயக்கம், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் கேலிச் சித்திரங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைக் கடந்தபோது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. எனினும், பாதுகாப்புத் தடைகளை தகர்த்துக்கொண்டு முன்னேறிய போராட்டக்காரர்கள், பொலிஸாரைத் திசைதிருப்பி உலக வர்த்தக மையத்துக்கு முன்பாகத் திரண்டனர்.
இதன்போது, உலக வர்த்தக மையத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும் அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அதிகாரிகள் தமது விசனத்தை வெளியிட்டனர்.





