ஒற்றையாட்சி தீர்வை தமிழினம் நிரகாரிக்கிறது; தமிழ்த் தேசியப் பேரவையின் மே தினப்பிரகடனத்தில் வலியுறுத்து
தமிழர் தேசத்தை கபளீகரம் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாதிட்டம், கீழ் மல்வத்துஓயா திட்டம், மகாவலி அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட இனவாத நோக்கிலான திட்டங்கள் உடன் நிறுத்தப்படவேண்டும்.
தமிழ் மக்கள் - காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்குட்பட்ட வேறு எந்தவொரு தீர்வையோ தமிழினம் நிராகரிப்பதாக தமிழ்த் தேசியப் பேரவை மே தினப் பிரகடனத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய பேரவையின் மேதினக் கூட்டம் 01-05-2026அன்று இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றபோதே குறித்த பிரகடனம் வெளியிடப்பட்டது.
அப்பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழர் தேசமானது தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் உறுதியாக நின்று, சிங்கள பௌத்த பேரினாவத ஒடுக்குமுறைக்கு அடிபணியாது, அதனை எதிர்த்துநின்று, தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காக ஜனநாயக ரீதியாகத் தொடர்ந்து போராடும்.
போருக்கு பின்னரான சூழலில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் தமிழ் தேச அங்கீகாரத்தையும், தனித்துவமான இறைமையையையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுத்திய சமஸ்டி தீர்;வுக்கு ஆணை வழங்கிவந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை எட்டுவதற்கு அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் பாரிய பொறுப்பும்; சர்வதேசத்துக்கு உள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்றே இந்த ஜே.வி.பி. அரசாங்கமும் தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆணைக்கு மாறாக, ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியலமைப்பை தமிழ் மக்கள் மீது புதிதாக திணிக்க எடுக்கும் முயற்சியையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழின அழிப்பு போருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இதே சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.
தமிழ் மக்கள் - காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்குட்பட்ட வேறு எந்தவொரு தீர்வையோ தமிழினம் நிராகரிக்கிறது.
தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை மூலம் ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதுடன் அதற்காக சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும்.
இனவழிப்பு யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஈழத் தமிழ்த் தேசத்தை, போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்து, அத்தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதியேற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பதுடன் அதற்குப் பதிலாக அரசால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம்.
அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும். ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் நிறுத்தப்படல் வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்.
தமிழ்த் தேசத்தின் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்;பட்டு. அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படல் வேண்டும்.
நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டுவரும் மலையக தமிழ் மக்களது காணி உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்படல் வேண்டும்.
தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் தடுக்கப்படுவதுடன், கடற்தொழிலாளர்கள்; தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும், என்பதுடன் அந்த அலுவலகத்திற்கு கணக்காளர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும்.
தொல்லியல் மற்றும் பௌத்த அடையாளங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதும் உடன் நிறுத்தப்படல் வேண்டும். (தொப்பிகல, கெவுளியாமடு, பச்சைக்கொடிசுவாமிமலை, தாந்தாமலை, திரியாய், குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி)
தமிழர் தேசத்தை கபளீகரம் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாதிட்டம், கீழ் மல்வத்துஓயா திட்டம், மகாவலி அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட இனவாத நோக்கிலான திட்டங்கள் உடன் நிறுத்தப்படவேண்டும்.
மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களது மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமடு மாதவனையில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் வெளியேற்றப்பட்டு மேய்ச்சல் தரைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





