போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும் விளைவுகளில் இருந்து மீள காலம் செல்லும் - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
மத்திய கிழக்கு மோதல் நிலைமையை தொடர்ந்து பூகோள எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் நிலைமையை தொடர்ந்து பூகோள எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களினால் மத்திய கிழக்கில் 19 எரிபொருள் மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய கிழக்குக்கு வெளியில் பெருமளவிலான எரிபொருள் மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே போர் நிறுத்தம் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள சற்றுக் காலம் செல்லுமென வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-04-2026 அன்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: மத்திய கிழக்கு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் நிரந்தரமாக்கப்பட வேண்டும். அமைதி நிலையான நிலைநாட்டப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலைமையால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு ஒருசில நாட்களேனும் செல்லும்.
சபையில் இருந்துக் கொண்டு பொய்யுரைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணமளிக்கப்பட்டுள்ளது. 4 இலட்சத்து 31166 குடும்பங்களுக்கு நிவாரண நிதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு இலட்சத்து 78,890 பாடசாலை மாணவர்களுக்கு 25 ரூபா என்ற அடிப்படையில் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வாடகை கொடுப்பனவு, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு என்ற அடிப்படையில் முறையாக நிவாரணமளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டுபவர்கள் இந்த ஆவணங்களை பரிசீலனை செய்யலாம்.
மத்திய கிழக்கு மோதல் நிலைமையை தொடர்ந்து பூகோள எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களினால் மத்திய கிழக்கில் 19 எரிபொருள் மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய கிழக்குக்கு வெளியில் பெருமளவிலான எரிபொருள் மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே போர் நிறுத்தம் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள சற்றுக் காலம் செல்லும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் போது தித்வா புயல் தாக்கத்துக்கு முகங்கொடுத்தோம், தித்வா புயல் தாக்கத்தில் இருந்து மீண்டெழும் போது மத்திய கிழக்கு மோதல் நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முகங்கொடுத்தோம். சகல நெருக்கடிகளையும் எம்மால் எதிர்கொள்ள முடியும். அதற்கான தலைமைத்துவம் எம்மிடம் பலமாக உள்ளது என்றார்.





