நான்கு பிரதான நிறுவனங்களும் முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் - அமைச்சரவை பேச்சாளர்
நாம் 6 நிறுவனங்களை அமைத்துள்ளதோடு, அவற்றில் 4 பிரதான செயற்படும். 2024ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், மின்சாரசபையில் 12 000 பேர் தொழிலை இழந்திருப்பர்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பிற்கமைய, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிறுவனங்களும் முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்கும். கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட 12 நிறுவனங்களுக்கு பதிலாக, தற்போது 6 நிறுவனங்கள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 12,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 10-03-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முற்றுமுழுதாக அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனங்களிடமே பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இரு நிறுவனங்கள் இந்த மறுசீரமைப்புக்களின் இடைநிலை பணிகள் சார்ந்தவையாக உள்ளன. எஞ்சிய 4 நிறுவனங்களில் தேசிய மின்சார கட்டமைப்பு இயக்கி (என்.எஸ்.ஓ.), தேசிய மின்பகர்மான வலையமைப்புச் சேவை வழங்கும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (National Transmission Network Service Provider Private Limited), இலங்கை மின்உற்பத்தி தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (Electricity Generation Lanka Private Limited), வரையறுக்கப்பட்ட மின்விநியோக நிறுவனம் (Electricity Distribution Limited) ஆகிய இந்த நிறுவனங்கள் முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போதும் மின் உற்பத்தி, விநியோகம், மின் கடத்தல் மற்றும் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளிட்ட செயற்பாடுகள் 4 பிரிவுகளின் கீழ் இலங்கை மின்சாரசபையால் முன்னெடுக்கப்பட்டது. அவையே தற்போது 4 நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மின்சாரசபை 500 பில்லியன் ரூபா செலவில், 400 பில்லியன் ரூபா மின் உற்பத்திகான செலவாகும். மின் உற்பத்தி நிறுவனத்தின் ஊடாக மின் உற்பத்திக்கான செலவை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
மேலும் முன்னர் காணப்பட்ட பிரிவுகளை நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம் அவற்றின் செயற்றிறனை அதிகரிப்பதற்கும், தனியாருக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கி குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும் இந்த மறுசீரமைப்பின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிறுவனங்களுக்கு நிர்வாக அதிகாரிகளும், பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது. 2024 ஜூன் 27ஆம் திகதி மறுசீரமைப்பிற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டத்துக்கமைய 12 நிறுவனங்களை அமைத்து அவற்றில் மூன்றை மாத்திரம் அரச நிர்வாகத்தின் கீழ் இயக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. எஞ்சியவை தனியார் நிறுவனங்களாகும். அவற்றுக்கு பதிலாக நாம் 6 நிறுவனங்களை அமைத்துள்ளதோடு, அவற்றில் 4 பிரதான செயற்படும். 2024ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், மின்சாரசபையில் 12 000 பேர் தொழிலை இழந்திருப்பர்.
எவ்வாறிருப்பினும் நாம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளோம். 2025 ஆகஸ்டில் திருத்தப்பட்ட சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒக்டோபரில் இது குறித்து ஊழியர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது. நிறுவனங்களில் இணைய விரும்பாதவர்களுக்கு சுய விருப்பில் ஓய்வு பெற வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்கமைய ஓய்வு பெற விண்ணப்பித்த 2153 ஊழியர்களில், 2113 ஊழியர்களுக்கு நஷ்டஈட்டுடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது. ஏனைய ஊழியர்களுக்கான கொடுப்பனவு, மேலதிகக் கொடுப்பனவு உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றார்.





