பெப்ரவரி 5ஆம் திகதி டெல்லி செல்லும் ரில்வின்
புதுடெல்லியில் நடைபெறவுள்ள உயர்மட்ட சந்திப்புகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள உயர்மட்ட சந்திப்புகளில் அவர் பங்கேற்கவுள்ளார். எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்புகள் எதுவும் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், இடதுசாரி பின்புலத்தைக் கொண்ட ஜே.வி.பி. தலைவர்கள் இந்தியாவுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை பேணுவது தெற்காசிய அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
வரலாற்று ரீதியாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜே.வி.பி. தற்போது இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் பிரதான அங்கமாக உள்ள நிலையில், இந்தியாவுடன் நடைமுறைச் சாத்தியமான உறவை வளர்க்க முற்படுகிறது. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் பங்கு குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜே.வி.பி.யின் ஆரம்ப கொள்கைப் பிடிப்புகளில், 1987 ஆம் ஆண்டு இந்திய -– இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியதில் டில்வின் சில்வா முக்கியப் பங்காற்றினார். இந்தியாவின் பிராந்திய தலையீட்டை அன்றும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., தற்போது அதன் பொதுச் செயலாளரை இந்தியாவுக்கு அனுப்புவது, கட்சியின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு பாரிய இராஜதந்திர மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. அவர் இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரிலேயே செல்கிறார். இந்த விஜயம் ஜே.வி.பி.யானது பிராந்திய சக்தியாகிய இந்தியாவுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.





