வரவு,செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 6ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்தார். ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை 4 மணித்தியாலங்களும் 15 நிமிடங்கள் வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கமாகும்.
இந்நிலையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 6ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவா எதிராகவா வாக்களிப்பது என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக கூடி ஆராய்ந்துள்ளன.
அதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ,மலையகக்கட்சிகள் இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லையெனக் கூறப்படுகின்றது. என்றாலும் வரவு செலவு திட்டத்தில் இந்தமுறை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை மலையக கட்சிகள் விவாதத்தில் ஆதரவளித்து உரையாற்றி இருந்தன. அதனால் அவர்கள் வாக்களிப்பில் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகிறார்கள் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றையதினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது





