கனடிய உயர்ஸ்தானிகடத்தில் தமிழரசுக்கட்சி விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த கனடிய உயர்ஸ்தானிகர் 27-01-2026 அன்று அங்குள்ள தனியார் விடுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் பதில் பொதுச்செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியிருந்தார்.
கனடாவின் சமஷ்டி முறைமை சம்பந்தமான உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முன்மாதிரியாக இருக்கையில் இலங்கையில் சமஷ்டி முறைமையிலான ஆட்சி அதிகாரத்தை நிறுவதற்கான கனடாவின் தொடர்ச்சியான அழுத்தங்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சி இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்டினிடத்தில் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த கனடிய உயர்ஸ்தானிகர் 27-01-2026 அன்று அங்குள்ள தனியார் விடுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் பதில் பொதுச்செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக முதலில் கரிசனைகளைக் கொண்ட நாடாக கனடாவே இருந்தது. 2011ஆம் ஆண்டு இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு கனடாவே முனைந்திருந்தது.
அன்றிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையில் இணை அனுசரணையாளராக கனடா தொடர்ச்சியாக செயற்பட்டு வருவததோடு சர்வதேச நாடுகளுடனான உரையாடல்கள் மற்றும் பங்களிப்புக்கான பிரதான பங்காளாராகவும் இருந்து வருகின்றது.
அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகள் தொடர்பிலும் கனடா தொடர்ச்சியாக சாதகமான போக்கை வெளிப்படுத்தியே வருகின்றது. அதற்கான கனடிய அரசாங்கத்துக்கு நன்றிகளை முதலில் கூறினோம்.
தொடர்ந்து, கனடாவில் சமஷ்டி முறைமை தொடர்பில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது முன்மாதிரியாக இருப்பதோடு அதனைப் பின்பற்றியதாக இலங்கையிலும் ஆட்சி அதிகாரங்கள் சமஷ்டி அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதைக் கோரியதோடு, இலங்கை அரசாங்கத்துக்கும் அதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டோம்.
அத்துடன் கனடா தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்குச் சார்பாக வெளிப்படுத்தி வருகின்ற ஆதரவினையும், பங்களிப்பினையும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம் என்றார்.





