பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு நாமல் நிசாம் எதிர்ப்பு: பழனி திகாம்பரம் எம்.பி.
பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக சம்பள உயர்வை வழங்க உரிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொண்டோம்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கியுள்ளதை போன்று காணி பிரச்சினைக்கும் ஜனாதிபதி தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.மக்களின் வரிப்பணத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பளம் வழங்குவதை எதிர்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நிசாம் காரியப்பர் எதிர்க்கிறார்கள். பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டுக்கு உழைத்துக் கொடுத்துள்ளார்கள். கடந்த காலங்களில் வழங்க முடியாத சம்பள அதிகரிப்பை இந்த அரசாங்கம் வழங்குகிறது. அதற்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 13-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு 1750 ரூபா சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. பெருந்தோட்ட கம்பனிகள் ஊடாக 200 பெற்றுக்கொள்வதற்கும், அரசாங்கம் 200 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது வரவேற்கத்தக்கது.
பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக சம்பள உயர்வை வழங்க உரிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொண்டோம். இருப்பினும் அந்த முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை. இந்த அரசாங்கம் தற்போது 200 ரூபா வழங்க தீர்மானித்துள்ளது.இதனை நடைமுறைப்படுத்தினால் சிறந்ததாக அமையும்.
இந்த சம்பள அதிகரிப்பு வருகையை அடிப்படையில் வழங்காமல் அடிப்படை சம்பளமாக அதிகரித்திருந்தால் மக்கள் கொண்டாடியிருப்பார்கள். இந்த 200 ரூபா வழங்கல் 2026 ஆம் ஆண்டுக்கு மாத்திரமா அல்லது தொடர்ச்சியாக வழங்கப்படுமா என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் சிறந்த திட்டங்களை மேற்கொண்டால் நாங்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இருப்பினும் பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் இந்த சம்பள வழங்கல் தொடர்ச்சியாக கிடைக்குமா என்பதையும் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிற்றுறை அழிவடையும் நிலையில் உள்ளது. ஆகவே இந்த தொழிற்றுறையை மறுசீரமைத்து பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெருந்தோட்ட காணிகளை மலையக மக்களுக்கு பிரித்து வழங்கி அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.
அரசாங்கத்தின் உள்ள மலையக பிரதிநிதிகள் பேச்சளவில் மாத்திரம் அரசியல் செய்யாது, அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மலையக பிரதிநிதிகள் பதவி விலக வேண்டும் என்று இன்று குறிப்பிடும் மலையக பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளை அமைக்கும் போது ஒன்றிணைந்து செயற்பட்டார்கள்.
பெருந்தோட்ட மக்களின் காணி பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பளம் வழங்குவதை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நிசாம் காரியப்பர் எதிர்க்கிறார்கள். பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டுக்கு உழைத்துக் கொடுத்துள்ளார்கள். கடந்த காலங்களில் வழங்க முடியாத சம்பள அதிகரிப்பை இந்த அரசாங்கம் வழங்குகிறது. அதற்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என்றார்.





