ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும்: கலைச்செல்வி எம்.பி
இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார். தற்போது 400 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜீவன் தொண்டமான் இதற்கு என்ன சொல்லப்போகிறார். பதிலளிக்க முடியாவிடின் அவர் பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும். இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்ட மலையக பிரதிநிதிகள் அனைவரும் பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 08-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உலக சாதனை படைத்தது. பிரதான சாதனையாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுள்ளார்.அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் வீட்டு உரிமை காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 1992 -2021 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையே பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் உட்கட்டமைப்பு துறை அபிவிருத்திகளுக்காக கடந்த காலங்களில் வரவு - செலவுத் திட்டத்தின் போது நான் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.
வரவு செலவுத் தி;ட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை ஜனாதிபதி 400 ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஜீவன் தொண்டமான் தற்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார். பதிலளிக்க முடியாவிடின் அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும். இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்ட மலையக பிரதிநிதிகள் அனைவரும் பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.





