கொழும்பு மாநகரசபை வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்: அரசாங்கம்
கொழும்பு வாழ் மக்களுக்காக இதனை நிறைவேற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது.
கொழும்பு மாநகரசபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வரவு - செலவு திட்டமே இன்று மீண்டும் முன்வைக்கப்படும். கொழும்பு வாழ் மக்களின் நலன் கருதி அரசியல் விளையாட்டுக்களை புறந்தள்ளி வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 30-12-2025 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது இந்த கோரிக்கையை முன்வைத்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்றங்களில் வரவு - செலவு திட்டம் தோல்வியடைந்தால் புதிய வரவு - செலவு திட்டம் முன்வைக்கப்படுவதில்லை. அந்த வகையில் கொழும்பு மாநகரசபையில் இன்றைய தினம் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வரவு - செலவு திட்டமே மீண்டும் முன்வைக்கப்படும்.
கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவு - செலவு திட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு அதற்கு எதிராக வாக்களித்திருப்பார்களாயின், அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிப்பதற்கு அவர்களுக்கு போதுமானளவு கால அவகாசம் காணப்பட்டது.
வரவு - செலவு திட்டத்துக்கு அவர்கள் தமது யோசனைகள், பரிந்துரைகளையும் முன்வைக்க முடியும். எனவே அவர்கள் வரவு - செலவு திட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு அதற்கு எதிராக வாக்களித்திருப்பார்கள் என நாம் நம்பவில்லை.
கொழும்பு வாழ் மக்களுக்காக இதனை நிறைவேற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. எனவே அதனைக் கருத்திற் கொண்டு அன்று எதிரான வாக்களித்தவர்கள், இம்முறை தமது தீர்மானத்தை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
இது மக்களுக்காக தயாரிக்கப்பட்ட வரவு - செலவு திட்டமாகும். கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட இந்த வரவு - செலவு திட்டத்தை, அரசியல் விளையாட்டுக்களை புறந்தள்ளி நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.





