ஸ்ரீலங்கா கிரிக்கெட் - இரான் தலைமையில் இடைக்கால குழு நியமனம்
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய அவர், தேசிய பாடசாலை மட்டத்தில் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் நேற்று இராஜினாமா செய்தனர். அதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தலைமையிலான இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமமே நியமித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான சிதத் வெத்தமுனி, ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார முதலானோரும் இடைக்கால நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தலைவராக பதவி வகித்த ஷம்மி சில்வா கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் அவர் 4 ஆவது தடவையாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
கடந்த இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி அடைந்த தோல்விகளையடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய நிர்வாகத்தை நியமிக்க வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன.
இந்நிலையில், ஷம்மி சில்வா தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரியுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.
28-04-2026 அன்று விசேடக் கூட்டமொன்றை நடத்திய ஷம்மி சில்வா தலைமையிலான நிறைவேற்றுக்குழு இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்திருந்தது.
இதையடுத்து, 29-04-2026 அன்று ஷம்மி சில்வா உள்ளிட்ட குழுவினர் இராஜினாமாவை அறிவித்தனர். இவர்களின் இராஜினாமாவை இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமமே ஏற்றுக்கொண்டார்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் நேற்று முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாக அவ்வமைச்சு அறிவித்தது.
அதன்பின் முன்னாள் பாராளுமன்ற நிதி இராஜங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரான் விக்கிரமத்ன தலைமையிலான மறுசீரமைப்பு குழுவொன்றை (இடைக்கால நிர்வாகக் குழு) அமைச்சர் சுனில் குமார கமகே நியமித்தார்.
9 பேர் கொண்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சிதத் வெத்தமுனி, ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, பிரகாஷ் ஷாப்டர், துஷிர ரதெல்ல, அவன்தி கொலம்பகே, உபுல் குமாரப்பெரும, டினால் பிலிப்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
68 வயதான இரான் விக்கிரமத்ன, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அப்பாடசாலையின் கிரிக்கெட் அணி வீரராகத் திகழ்ந்தவர்.
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய அவர், தேசிய பாடசாலை மட்டத்தில் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.
1977 ஆம் ஆண்டு தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும அவர் விளையாடியுள்ளார். இங்கிலாந்தின் கென்ட் அமெச்சூர் லீக் தொடரிலும் அவர் விளையாடியுள்ளார்.





