கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்
வழமை போல இந்த திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பெருமளவு குருக்கள் மற்றும் துறவிகள் வருகை தரவுள்ளனர்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமர்சையாக இன்று இறுதிநாள் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த சிறப்புக் கூட்டுத் திருப்பலி இன்று காலை நிறைவேற்றப்படவுள்ளது.
யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் மற்றும் இந்திய சிவகங்கை மறை மாவட்ட குரு முதல்வர் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு நாடுகளின் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகளின் பங்கேற்பில் இந்த கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
வருடாந்த புனித திருவிழா நிகழ்வுகள் 27-02-2026 மாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து திருச் செபமாலை தியானம் மற்றும் இலங்கை - இந்திய பக்தர்கள் இணைந்து நடத்தும் திறந்த வெளி சிலுவைப்பாதை ஆகிய நிகழ்வுகள் நேற்று மாலை ஆலய வளாகத்தில் நடைபெற்றன.
இம்முறை திருவிழாவில் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 85 விசைப்படகுகள் மற்றும் 24 ஏனைய படகுகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகைத் தந்துள்ளனர்.
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக சகல அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் இம்முறை திருவிழா தொடர்பில் தெரிவிக்கையில்;
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக நேற்று மாலை கொடியேற்றமும் நற்கருணை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெற்றது. இன்று (28) காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
அனைத்து மக்களும் ஒன்று கூடி புனித அந்தோனியார் திருத்தலத்தில் நமது நாட்டுக்காகவும், நம் நாட்டு மக்கள் மற்றும் அனைத்து மக்களுடைய சுதந்திரமான வாழ்வுக்காகவும் ஆசீர்வாதம் வேண்டி மன்றாடுவோம்.
அதற்காக அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். வழமை போல இந்த திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பெருமளவு குருக்கள் மற்றும் துறவிகள் வருகை தரவுள்ளனர்.
இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை லூர்து ஆனந்த் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள், துறவிகளும் அதே வேளை, இலங்கையில் யாழ். மறை மாவட்டத்தின் குருமுதல்வராகிய எனது தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குருக்கள் துறவிகள் இந்த திருவிழாவில் பங்குகொள்ளவுள்ளார்கள் என்றார்.





