ஞானசார தேரருக்கு வழங்கிய நான்கு வருட தண்டனை மீண்டும் உறுதி
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவின் இனக்கத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி. குமாரன் ரத்னம் இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
இஸ்லாத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 18-11-2026 அன்று உறுதி செய்தது.
கொழும்பில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூரகல விகாரை தொடர்பில் விடுத்த கருத்து மூலம் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, அப்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிதிபதியாக கடமையாற்றிய ஆதித்ய படபெந்திகே 2024 மார்ச் 28 ஆம் திகதி நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார். அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
குறித்த தண்டனைத் தீர்ப்பிலிருந்து தம்மை குற்றமற்றவர் என விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு தொடர்பில் மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் பரிசீலித்த பின்னர், இறுதியாக மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவின் இனக்கத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி. குமாரன் ரத்னம் இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி. குமாரன் ரத்னம், "புத்த தர்மமானது மெத்தா, கருணா, முதிதா, உபௌக்ஷா ஆகிய நான்கு நான்கு பிரதான அம்சங்களை துண்களாக கொண்டு அமைந்துள்ளது. இது அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. அதேபோன்று, ஏனைய மதங்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் மதிப்பளிப்பதே புத்த தர்மத்தில் போதிக்கப்பட்டுள்ளது. பிக்சுக்களிடம் இருந்து சமூகம் எதிர்பார்ப்பது, விநய பீடகம் மற்றும் அஷ்டலோக தருமத்திற்கு அமைய சரியான நடத்தையையும் சரியான விடயங்களை உபதேசிப்பதையுமாகும். அதற்கமைய, மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால், மேல் நீதிமன்றத்தினால் தண்டனையுடன் கூடிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு எவ்வித தேவையும் இல்லை என்றார். அதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகின்றது. தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காகக் குற்றம் சுமத்தப்பட்ட தேரரை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதியரசர் இதன்போது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொழும்பில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூரகல விகாரை தொடர்பில் விடுத்த கருத்து மூலம் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்ததன் மூலம் தண்டனைச் சட்டக்கோவையின் 291 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்துள்ளார் எனச் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





