மஹிந்தவுக்கு நாமல் உருக்கமாக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து மடல்
வலிமைமிக்க தந்தையாக உலகத்தின் முன்னிலையில் ஒட்டுமொத்த தேசத்தின் பிள்ளைகளுக்கும் தந்தையாகத் திகழ்வது எவ்வாறு என்பதையும் உங்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மூத்த மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது தந்தைக்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து மடலொன்றை எழுதியுள்ளார்.
'உங்கள் அருகில் இருக்க முடியாவிட்டாலும், எனது பிள்ளைகள் உங்களை அணைத்துக்கொள்வார்கள்', தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பைத் தொலைவால் ஒருபோதும் பிரித்துவிட முடியாது என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனது அன்பான தந்தைக்கு,
அன்பான அப்பாவே,
இந்த ஆண்டு உங்களுடைய பிறந்தநாளன்று உங்களுக்கு அருகில் இருந்து வாழ்த்துத் தெரிவிக்க முடியாமல், குடும்பத்தினரிடமிருந்தும் அன்புக்குரியவர்களிடமிருந்தும் பிரிந்து இந்த கடினமான காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும், சிறை அறையின் சுவர்களுக்கு அப்பால் உங்களுக்காக என் இதயத்தில் நிறைந்திருக்கும் அன்பும் மரியாதையும் அளவற்றவை என்பதைப் பதிவு செய்கிறேன்.
வாழ்க்கையில் நாம் ஒருபோதும் எதிர்பார்த்திராத சவால்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில், எமக்கு பலமாக இருப்பவை எமது பெற்றோரிடமிருந்து கிடைத்த அன்பு, முன்மாதிரி மற்றும் வாழ்க்கைப் பாடங்களே.
அப்பாவே, தலைமைத்துவம் என்பது ஒரு பதவியை வகிப்பது மட்டுமல்ல என்பதை எங்களுக்குக் கற்றுத் தந்தீர்கள். அது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும், சவால்களுக்கு மத்தியில் தளராது நிலைத்து நிற்பதும், தான் நம்புகின்ற விடயங்களுக்காக அஞ்சாமல் துணிச்சலுடன் குரல் கொடுப்பதும் என்பதை உங்களுடைய வாழ்க்கையின் ஊடாக எங்களுக்குப் புலப்படுத்தினீர்கள்.
எமது நாட்டின் வரலாற்றில் இருண்ட காலகட்டமொன்றில், தாய்நாட்டின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் அன்புக்குரிய பிள்ளைகளுக்காக எவருக்கும் அஞ்சாமல் அமைதியை ஏற்படுத்திய துணிச்சலான தலைவர் நீங்களே. அதற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள், செய்த தியாகங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நீங்கள் தாங்கிக்கொண்ட பல்வேறு துயரங்கள் குறித்து ஒரு மகனாக நான் மிக நெருக்கமாக அறிந்திருக்கிறேன்.
இன்று நான் எதிர்கொண்டுவரும் இந்தக் கடினமான காலகட்டத்தில், நீங்கள் எனக்குக் கற்றுத்தந்த பொறுமை, துணிச்சல் மற்றும் தளராத உறுதிப்பாட்டின் பெறுமதியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு வருகின்றேன்.
ஒரு தந்தையின் உள்ளம் எத்தகைய வலிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். ஒரு பிள்ளையின் மீதான தந்தையின் ஆழமான பாசத்தை இதயத்தின் ஆழத்தில் சுமந்துகொண்டு, அதேவேளை வலிமைமிக்க தந்தையாக உலகத்தின் முன்னிலையில் ஒட்டுமொத்த தேசத்தின் பிள்ளைகளுக்கும் தந்தையாகத் திகழ்வது எவ்வாறு என்பதையும் உங்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.
இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு உண்மைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நானும் ஒரு தந்தையே. இன்று உங்களுக்கு அருகில் இருக்க முடியாவிட்டாலும், உங்களுடைய இரத்த உறவின் வழித்தோன்றல்களான எனது பிள்ளைகள் இன்று உங்கள் அருகில் இருப்பார்கள். எனக்காக அவர்கள் உங்களை அணைத்துக்கொள்வார்கள்.
எனது கரங்களால் உங்களை அணைத்துக்கொள்ள முடியாததால், எழுத்துக்களால் உங்களை அரவணைத்துக்கொள்ள எண்ணினேன். ஏனெனில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பைத் தொலைவு ஒருபோதும் பிரித்துவிட முடியாது.
அரசியல் சூழலில் நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்த கடினமான நிலைமைகள், துன்புறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு மத்தியிலும், கிருவாப்பத்துவவின் மஹிந்த ராஜபக்ஷவாக, மண்ணின் மைந்தனாக வாழ்ந்த எனது தந்தைக்கு, உங்களின் அன்புக்குரிய மூத்த மகனான நான், நோய்நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வையும், மனவலிமையையும், அளவற்ற அன்பையும் இவ்வாறு எழுத்துக்களில் சமர்ப்பிக்கின்றேன்.
எனது அன்பான தந்தையே! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இதயபூர்வமான அன்புடன், உங்களின் அன்புக்குரிய மூத்த மகன், நாமல் எனக் குறிப்பிட்டுள்ளார்.





