கடன் சுமைக்கு நடுவிலும் பொருளாதார வல்லரசு கனவு: ஷெபாஸ் ஷெரீப்பின் அதிரடி இலக்கு
ரெக்கோ டிக் திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதங்களும் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் நீடிக்கின்றன.
2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக பாகிஸ்தானை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நீண்டகாலப் பொருளாதாரக் கணிப்பை விட 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த இலக்கை எட்டப் போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த நிறுவனத்தின் கணிப்பின்படி, 2075-ஆம் ஆண்டில்தான் பாகிஸ்தான் உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
கடுமையான கடன் சுமை ஒருபுறம், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கான ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலை மறுபுறம் எனப் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது பாகிஸ்தான். இந்தச் சூழலில், நாட்டின் இயற்கை வளங்களைப் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் ஷெரீப் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, ரெக்கோ டிக் பகுதியில் உள்ள செம்பு மற்றும் தங்க வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையை விரிவுபடுத்தவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
எனினும், ரெக்கோ டிக் திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதங்களும் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் நீடிக்கின்றன. வலுவான பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 12.7 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தேசியவாதம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட சவால்கள் இந்த வளர்ச்சிப் பயணத்துக்கு தடையாக அமையக்கூடும்.





