இலங்கை -சீனா பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தல் குறித்து அவதானம்
லங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவான ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியமான துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் வேய் ஹுவாசியாங் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் வேய் ஹுவாசியாங் மற்றும் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிதியமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு சீனா வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியமான துறைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடித்தளமாகக் கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவான ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்திக பிரேமரத்ன மற்றும் நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
சீனத் தூதுக்குழுவில் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் டாங் யான்தி, அட்டாச்சே மெங் யுவே, மூன்றாம் நிலை செயலாளர் லூ வென்ஜிங் மற்றும் அட்டாச்சே லி சின்வேய் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.





