உலகப் பெண் வழிகாட்டிகள், பெண் சாரணியர்சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு
பெண் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் வலுவூட்டுவதில் WAGGGS மற்றும் அதன் உறுப்பினர் அமைப்புகள் தொடர்ச்சியாக ஆற்றிவரும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.
உலகப் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணியர் சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, இலங்கையின் பாடசாலை முறைமையில் பெண் வழிகாட்டி இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். பெண் பிள்ளைகள் மத்தியில் தலைமைத்துவம், ஒழுக்கம், குழுப்பணி, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதில் இவ்வியக்கம் ஆற்றும் முக்கியப் பங்கையும் அவர் பாராட்டினார்.
இலங்கைப் பெண் வழிகாட்டிகள் சங்கத்துடன் இணைந்து, 2026 நவம்பர் 14 முதல் 17 வரை கொழும்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஆசிய பசுபிக் பிராந்திய வளர்ச்சிப் பரிமாற்றச் செயலமர்வு 2026 தொடர்பில் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
இச்செயலமர்வில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பங்களாதேஷ், இந்தியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளின் உறுப்பினர் அமைப்புகளைச் சேர்ந்த தீர்மானம் எடுக்கும் அதிகாரிகளும் சிரேஷ்ட பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்தில் பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், குறிப்பாகச் சமமான வாய்ப்புகள், பங்கேற்பு, தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றுக்கான தடைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.
இச்சவால்களைப் பெண் பிள்ளைகள் வெற்றிகொண்டு, தமது ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தி, சமூகத்திற்கு ஆக்கபூர்வமாக பங்களிப்புச் செய்யக்கூடிய ஆதரவான, சாதகமான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
பெண் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் வலுவூட்டுவதில் WAGGGS மற்றும் அதன் உறுப்பினர் அமைப்புகள் தொடர்ச்சியாக ஆற்றிவரும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். மேலும், இவ்வியக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், நாடளாவிய ரீதியில் அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் இலங்கைப் பெண் வழிகாட்டிகள் சங்கத்துடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பை அவர் ஊக்குவித்தார். இந்நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்தவும் கலந்துகொண்டார்.





