சாமர சம்பத், தனிப்பட்ட செயளாலர் ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு
இவ்வழக்குக்கு அடிப்படையான சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலமொன்று பதிவு செய்யப்படவில்லை.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணைக் கோரிக்கையை தள்ளுபடி செய்து, சாமர சம்பத் மற்றும் அவரது தனிப்பட்ட செயளாலர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி ஊழல் வழக்கு 20-11-2026 அன்று கொழும்பு நீதிவான் அசங்க எஸ் போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட பிணைக்கோரிக்கை மீதான உத்தரவை நீதிவான் அறிவித்திருந்தார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 (1) ஆம் பிரிவின் பிரகாரம் இச்சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்குப் போதுமான விசேட காரணங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிவான், அதற்கமைய, சந்தேகநபரின் பிணைக் கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிவான் குறிப்பிட்டார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்கவின் தனிப்பட்ட செயலாளரான சுமதிபால லியனாராச்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி பிணைக் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
பிணைக் கோரிக்கையின் பின்னர் விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி, இச்சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த ஆரம்ப 'பி' (B) அறிக்கைக்கும், இறுதி மேலதிக அறிக்கைக்கும் இடையிலான விடயங்கள் ஒன்றுக்கொன்று முரணானவையாக உள்ளன.
குறித்த இலஞ்சப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் தினேஷ் பெரேரா என்பவரிடமிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கடந்த வருடம் ஜூன் மாதம் 24 ஆம் திகதி வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துள்ளதாகவும், அவ்வாக்குமூலத்தில் குறித்த நபர் இப்பணத்தை முதலாவது சந்தேகநபரிடம் வழங்கியது சாமர சம்பத் தசநாயக்கவின் அரசியல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவே எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் ஜசட்டத்தரணி தெரிவித்தார்.
தொடர்ந்து, அவ்விடயம் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அதற்கமைய இச்சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆம் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தலும் சட்டத்திற்கு முரணானது . அதற்கமைய, குறித்த விடயங்களை விசேட காரணங்களாகக் கருதி எனது சேவைபெறுநறை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையான உதவிச் சட்டப் பணிப்பாளர் , தினேஷ் பெரேரா என்பவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட மறுதினமே அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், இவ்வழக்குக்கு அடிப்படையான சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலமொன்று பதிவு செய்யப்படவில்லை.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலை இந்நீதிமன்றத்தின் முன்னிலையில் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும், அதனை உயர் நீதிமன்றத்தில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் உதவிச் சட்டப் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்ச்சியங்களையும் பரிசீலித்த நீதவான், சுமதிபால லியனாராச்சி என்ற சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டார். அத்தோடு சாமர சம்பத் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இதன்போது நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்காக 3 தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு 81 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகச் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி ஆகியோருக்கு எதிராக மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





