சீனாவுடனான கனடாவின் வர்த்தக உறவு டிரம்பின் முக்கிய கவலை அல்ல: மார்க் கார்னி
தேவைக்கேற்ப பிற நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகளையும் கனடா பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடனான கனடாவின் வளர்ந்து வரும் வர்த்தக உறவுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கியக் கவலையாக இல்லை என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான வர்த்தக உறவுகளை மீண்டும் வலுப்படுத்த கனடா முயற்சி செய்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின்போது டிரம்ப் மற்றும் கார்னி இடையே நடைபெற்ற சந்திப்பில், அமெரிக்கா-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இடையிடையே முடங்குவதும் மீண்டும் தொடங்குவதுமாக உள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளில், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் கனடாவின் இறையாண்மையை மதிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சீனாவுடனான கனடாவின் வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்கா விமர்சனங்களை முன்வைத்தாலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கே கனடா தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று கார்னி தெரிவித்துள்ளார். அதேவேளையில், தேவைக்கேற்ப பிற நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகளையும் கனடா பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா-சீனா இடையிலான உத்திசார் மோதல்களிலிருந்து தனித்த நிலையில், சீனாவுக்கான கனடாவின் முக்கியப் பொருள் ஏற்றுமதிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





