இலங்கைக்கு எந்த வகையிலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயார் - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
இந்த உடன்பாடு எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்படும்.
இலங்கை விரும்பும் எந்தவொரு பொருத்தமான வழியிலும் அந்நாட்டிற்கு ஆதரவளிப்பதற்குச் சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக அதன் ஆசியா மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.
பாங்கொக்கில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தக்கூட்டத்தின்போது 15-10-2026அன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடத்தில் இலங்கை தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பேரண்டப் பொருளாதார சூழல் தற்போது பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளது. நாட்டின் நிதிச் செயற்பாடு மிகவும் வலுவாக இருப்பதுடன், கடன் மறுசீரமைப்புப் பணிகளும் பெருமளவில் நிறைவடைந்துள்ளன.
அத்துடன், நல்லாட்சி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட கட்டமைப்பு சார்ந்த முக்கிய விவகாரங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.
இலங்கைக்குச் சுமார் 345 மில்லியன் டொலர் நிதியுதவியை விடுவிப்பதற்காக, அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் ஏழாவது மதிப்பாய்வு தொடர்பான ஊழியர் மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியம் இந்த மாத தொடக்கத்தில் எட்டியுள்ளது.
இந்த மதிப்பாய்வு முழுமையாக நிறைவடையும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரை உரிமைகளுக்கான 345 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த உடன்பாடு எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு முன்னர் மற்றொரு மதிப்பாய்வுக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
தற்போதைய உடன்பாட்டிற்கு அப்பாலும், புதிய நிதி ஏற்பாடு, கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு போன்ற கொள்கை ஆலோசனைகள் ஊடாக இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இணைந்து செயற்படுவார்கள் என்றார்.





