பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன்
அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கையின் கீழ் உலக வங்கியால் வழங்கப்படுகின்ற நிதியுதவிக்கு இணையாக இக்கடன் வசதி வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சித்திறன் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகச் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர்கள் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார உறுதிப்பாட்டை மீண்டும் உருவாக்குதல், அரச நிதி நிலைமையின் நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நிலைபேறானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு, விரிவான பொருளாதார உறுதிப்பாடு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தி வருகின்றது.
வளர்ச்சி, மீட்சித்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான இலங்கையின் அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கையை அமல்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நேர்மறையான மதிப்பீட்டின் பின்னரே, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தால் இக்கடனை வழங்க உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கையின் கீழ் உலக வங்கியால் வழங்கப்படுகின்ற நிதியுதவிக்கு இணையாக இக்கடன் வசதி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய பொது மூலதன வளங்களின் கீழ் 24 மில்லியன் டொலர்களும், விசேட மூலதன வளங்களின் கீழ் 6 மில்லியன் டொலர்களும் என மொத்தம் 30 மில்லியன் டொலர்கள் கடனாகப் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





