36 சதவீத வரி சுமையால் 83,000 தொழில் வல்லுநர்கள் பாதிப்பு: துமிந்த ஹூலங்கமுவ
வருமான வரி மீளாய்வு தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வரி சதவீதங்களால் நாட்டின் பொருளாதாரத்தை இயக்கும் ஒரு சிறிய பிரிவினர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், வரி விகிதங்களில் உடனடியாகப் பெரிய மாற்றங்களைச் செய்வது நடைமுறையில் கடினம் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.
36 சதவீத அதிகபட்ச வரி விகிதத்தைக் குறைத்தால் ஏற்படும் பாரிய வருமான இழப்பை ஈடுசெய்ய வேறு வரிகளை அதிகரிக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வருமான வரி மீளாய்வு தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : நாட்டின் வருமானத்தில் சுமார் 80 சதவீதம் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் வருவதால், கீழ் மட்டத்தில் மாற்றம் செய்தால் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படாது. மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மேல் மட்டத்தில்தான் செய்ய வேண்டும். தற்போதைய வரி சதவீதங்களால் மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றனர்; குறிப்பாக உழைக்கும் போது செலுத்தும் வரியில் ஒரு சிறிய பிரிவினரே அதிக சதவீதத்தைச் செலுத்துகின்றனர். சுமார் 6 இலட்சம் வருமானம் பெறுபவர்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் இதைச் செலுத்துகின்றனர்; அதிலும் அதிக வரி செலுத்தும் பிரிவில் சுமார் 83,000 பேரே உள்ளனர். இவர்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை இயக்குபவர்களாகவும் அறிவுசார் பங்களிப்பை வழங்குபவர்களாகவும் உள்ளனர்.
36 சதவீத அதிக வரி சதவீதத்தில் ஒரு சீர்திருத்தம் வழங்க வேண்டும் எனத் தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன். அது அதிகம் என்பதே அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும். அதைக் குறைப்பதாக இருந்தால் பகுத்தறிவோடு செய்ய வேண்டும்; அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களுக்காக அல்லாமல், வருமானம் நிலையானதாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு வாகன இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் அடுத்த ஆண்டும் அதே அளவில் கிடைக்காது என்பதால், அந்த வருமானத்தை எங்கிருந்து பெறுவது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் சற்று நிலைத்தன்மை அடைய வேண்டும். குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு வரி விதிக்க முன்மொழிவதாகச் சிலர் நினைக்கலாம்; ஆனால் வரி வலையின் அடிப்படைக் கோட்பாட்டின்படி நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
நாட்டில் வேலை செய்பவர்களில் சுமார் 80 முதல் 81 சதவீதம் வரையிலானோர் குறைந்த வருமானப் பிரிவில் உள்ளனர். 36 சதவீத வரி விதிக்கப்படும் வரம்பை மாற்றியமைத்தால் சுமார் 16 பில்லியன் வருமான இழப்பும், மேலும் குறைத்தால் சுமார் 450 பில்லியன் வரை வருமான இழப்பும் ஏற்படலாம். 36 சதவீத வரியைக் குறைத்தால், அதனால் ஏற்படும் வருமானக் குறைவை ஈடுசெய்ய வேறு வழிகளில் வரி விதிக்க வேண்டிய நிலை ஏற்படும்;. உதாரணமாக வட் வரியையோ அல்லது பெருநிறுவன வரியையோ அதிகரிக்க நேரிடலாம். எனவே, தற்போதைய வரி சதவீதங்களில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்வது கடினம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட் வரியைக் குறைத்தால் நுகர்வு அதிகரித்து வருமானம் வரலாம் என்றாலும், அதில் பெரிய ஆபத்து உள்ளது; கடந்த காலங்களில் அது தோல்வியடைந்தும் உள்ளது. வரி சதவீதங்கள் அதிகம் என்பதில் அனைவரும் உடன்படுவர்; வருமான வரியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. இறுதி முடிவை ஜனாதிபதியே எடுக்க வேண்டும் என்றார்.





