ஜே.ஆர் வழியில் அநுர அரசும் பயணிக்கிறது - தயாசிறி எம்.பி.
ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு பதிலாக, எதிர்கால நீதித்துறை நியமனங்களுக்கு இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.
அரசியல் ரீதியிலான எதிர்வாதிகளை தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதற்குக் குற்றவியல் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜே.ஆர் ஜயவர்தன, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்து எவ்வாறு அரசியல் பழிவாங்கல் செய்தாரோ அந்த வழியில் தான் தற்போதைய அரசாங்கமும் பயணிக்கிறது. 1994 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்பதை அரசாங்க நினைவில் கொள்ள வேண்டும்.ஏனெனில் அரசியலில் ஏதும் நிலையல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-11-2026 அன்று நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்துக் மாறுப்பட்ட நிலைப்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அரசியல் ரீதியிலான எதிர்வாதிகளை தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதற்குக் குற்றவியல் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தடம் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் ரீதியான எதிர்வாதிகளை அரசியலில் இருந்து நீக்கம் செய்வதற்காகக் குற்றவியல் நீதித்துறையைப் பயன்படுத்தும் ஓர் அரசாங்கம், அடுத்த தேர்தலில் வாக்காளர்களை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது.தேர்தலை நடத்தினால் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள்.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் சந்தேகநபரொருவரை விளக்கமறியலில் வைக்க நீதிவானுக்கு அனுமதியளிக்கும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவு இன்று அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும். தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்னர், அத்தகைய சான்றிதழ்களுக்கு ஆதரவான உண்மை அடிப்படையை ஆராய்வதற்கு நீதிவானுக்கு போதிய அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பணி. தடுப்புக்காவலுக்கான காரணங்களைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அர்த்தமுள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டத்தின் கீழ், பதவியிலிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் இன்று மக்களுக்கு எந்தளவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு பதிலாக, எதிர்கால நீதித்துறை நியமனங்களுக்கு இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.
சிரேஷ்ட அரசியல்வாதிகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் உத்தேச தேசிய பாதுகாப்பு சட்டமூலம் உள்ளிட்ட அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்க வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமை நியமிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். நீதிபதிகள் குழாம் ஒதுக்கீடுகளை நிர்வகிக்கும் கொள்கைகள் மற்றும் முக்கிய வழக்குகளை விசாரிக்கத் தெரிவு செய்யப்படும் நீதிபதிகள் குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும்
இலங்கையின் அரசியல் வரலாற்றுடன், 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், 1980 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தது.தேர்தல் போட்டியிலிருந்து அரசியல் எதிரிகளை அகற்றுவதற்கு சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவது, அதே போன்ற தவறுகளை மீண்டும் நிகழ்த்துவதற்கு வழிவகுக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை பழிவாங்கியதை போன்று தான் இந்த அரசாங்கமும் தற்போது அரசியல் எதிர்வாதிகளை பழிவாங்குகிறது. 1994 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.ஆகவே அரசியலில் ஏதும் நிலையல்ல என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.





