அரசாங்கம் சர்வாதிகார பாதையில் பயணிக்கிறது - ரஞ்சித் மத்தும பண்டார
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கத்திற்கு வேண்டியவாறு திருத்துமாறு கூறுகின்றனர்.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக, நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் அடக்குமுறைச் சட்ட மூலங்களை அரசாங்கம் கொண்டுவர முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் 06-11-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறியவர்கள், இன்று அரசைக் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் மூலம் நாட்டை அடக்குமுறையால் ஆட்சி செய்யப் பார்க்கின்றனர். இச்சட்டங்கள் மூலம் பொலிஸாருக்கு அதிகாரம் அளிப்பதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கத்தின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் நாட்டைத் தம் விருப்பப்படி ஆட்டிப்படைக்கவே முயற்சிக்கின்றனர்.
கடந்த நாட்களில் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. மேலும், சிவில் நிர்வாகப் பொறுப்பை இராணுவத்துக்கு வழங்கி, நாட்டின் ஜனநாயகத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் முற்படுகிறது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றங்களின் சுயாதீனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தினாலேயே, வழக்கமாக ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 20 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுபவர்களையும் தொழிற்சங்கங்களையும் ஒடுக்குவதற்கே புதிய சட்டங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற 8 பில்லியன் ரூபா நஷ்டம், திறைசேரியில் பெருந்தொகை நிதி காணாமல் போனமை மற்றும் 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
மேலும், சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கத்திற்கு வேண்டியவாறு திருத்துமாறு கூறுகின்றனர். உலக வரலாற்றிலேயே எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் திருத்த கோரிய வரலாறு இல்லை. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை அரசாங்கம் கேலிக்கூத்தாக்கியுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையில் பயங்கரவாதம் எதுவுமில்லை. இவ்வாறான சூழலில் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்து மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயல்கிறது. அதற்கு மக்களின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என்றார்.





