கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
1989 மற்றும் 2022 சுற்றறிக்கைகள் அரச அதிகாரிகள் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜாப் மற்றும் கண்ணியமான மேலதிக ஆடைகளை அணிவதைத் தெளிவாகத் தடைசெய்யவில்லை என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த 6 முஸ்லிம் பெண் சுகாதார உதவி ஊழியர்களை அவர்களது ஹிஜாப் உள்ளிட்ட மத நம்பிக்கை அடிப்படையிலான ஆடைகளை அணியவேண்டாம் என வைத்தியசாலை நிர்வாகம் பணித்ததன் மூலம் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்துக்கு முரணான விதத்தில் வைத்தியசாலை நிர்வாகம் ஊழியர்களின் மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தியிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காண்பித்திருப்பதாகவும், தொழிலில் ஈடுபடுவதற்கான அவர்களது சட்ட ரீதியான உரிமையை மீறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று 1989 மற்றும் 2022 சுற்றறிக்கைகள் அரச அதிகாரிகள் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜாப் மற்றும் கண்ணியமான மேலதிக ஆடைகளை அணிவதைத் தெளிவாகத் தடைசெய்யவில்லை என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு அம்பாறை மாவட்டத்திலுள்ள மற்றொரு வைத்தியசாலை முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி மத நம்பிக்கை அடிப்படையிலான ஆடைகளை அணிவதற்கு அனுமதித்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, எனவே சுற்றறிக்கைகள் தொடர்பான கல்முனை வைத்தியசாலை நிர்வாகத்தின் விளக்கம் தன்னிச்சையானதும், நியாயமற்றதுமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை ஒழுக்காற்று விசாரணை எதுவுமின்றி முறைப்பாடு அளித்த ஊழியர்களை இடமாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அவர்களது உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நிர்ணயிக்கப்பட்ட சீருடைகளுடன் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜாப் உள்ளிட்ட மேலதிக ஆடைகளை அணிவதற்கு அனுமதி அளிக்கும் எழுத்துமூல வழிகாட்டலை வெளியிடல், கல்முனை வைத்தியசாலை நிர்வாகத்தினால் தாம் வாய்மொழிமூல துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக ஊழியர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்ட 6 பெண் ஊழியர்களும் மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இணைவதற்கு இடமளித்தல், இதன்போது அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலான ஆடைகளை அனுமதித்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.





