விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் டயானா கமகே
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செல்லுபடியாகும் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டைத் தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு 26-11-2026 அன்று கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, குறித்த குற்றச்சாட்டை எனது சேவைபெறுநர் ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், பின்னர் மீண்டும் அழைக்கப்பட்டபோது, டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பிரதிவாதியான டயானா கமகேயை ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான் அசங்க எஸ். போதரகம, பிரதிவாதியின் கைரேகைகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமை தொடர்பில், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





