வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைச் செலவிடுவதற்கான இயலுமை அரசிடம் இல்லை - ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு
திறைசேரியில் போதிய நிதி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஓய்வூதியதாரர்கள் தமது உரிமைகளுக்காக ஏன் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நிதியை உரிய முறையில் செலவிடுவதற்கான இயலுமை அரசாங்கத்திடம் இல்லையெனவும், இதனால் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 60 வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துவந்த தொழிற்சங்க இயக்கத்தின் முடிவுக்கான ஆரம்பம் என ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் 24-11-2026 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அஜித் மான்னப்பெரும மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மற்றும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதன்போது ஒருங்கிணைந்த கூட்டு எதிர்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிக்கையில், நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினை நிதி ஒதுக்கீடு செய்வதில் அல்ல. ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைச் செலவிடுவதற்கான இயலுமை அரசாங்கத்திடம் இல்லாமையே பிரதான பிரச்சினையாகும்.
உலக வங்கியின் அறிக்கையின்படி, கடந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையில் 16.7 சதவீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, வருட இறுதிக்குள் ஒதுக்கப்பட்ட நிதியில் 30 முதல் 40 சதவீதம் வரையான தொகையையே செலவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான குறைந்தளவிலான செலவினத்தின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை அடைந்துகொள்ள முடியாது. மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய துறைகளுக்கான நிதிச் செலவினங்கள் அதிகரிக்கப்படுவதில்லை என்பதுடன், ஏற்கனவே காணப்படும் செலவினங்களும் குறைவடையும் போக்கே காணப்படுகிறது என்றார்.
தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவிக்கையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஓய்வூதிய முரண்பாடுகளை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும், மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தையும் சமர்ப்பித்துள்ள நிலையில், அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் 2,500 ரூபாவை வழங்குவதாகவும், ஓய்வூதியப் பிரச்சினைக்கு 2028 ஆம் ஆண்டிலேயே தீர்வு காணப்படுமெனவும் தெரிவிக்கிறது.
திறைசேரியில் போதிய நிதி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஓய்வூதியதாரர்கள் தமது உரிமைகளுக்காக ஏன் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் ஒரு சதத்தினாலாவது அதிகரிக்கப்பட்டுள்ளதா? தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு அற்பமான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர, சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றார்.





