கியூபெக்கில் விமானம் அவசரமாகத் திருப்பி விடப்பட்டது
முப்பது வயதைக் கடந்த அந்த இளைஞர், மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒருவர், விமானியின் அறைக் கதவைத் திறக்க முயன்றதைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தில் உள்ளூர் விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் விமானப் பணிப்பெண் ஒருவரும் அவரைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை பிற்பகலில், கியூபெக்கின் வடக்குக் கரையோரப் பகுதியில் உள்ள பிளாங்-சப்ளான் நகரிலிருந்து செப்த்-ஈல் நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானம், வழியில் லா ரோமைன் நகரில் நின்று செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
விமானம் லா ரோமைன் நகரில் நின்றபோது, சம்பந்தப்பட்ட நபர் உட்பட இருவர் விமானத்தில் ஏறியதாகக் கியூபெக் மாகாணக் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட் மார்க் டெஸ்சியேர் தெரிவித்தார். சுமார் பத்து நிமிடங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
அந்த இளைஞர் விமானியின் அறைக் கதவைத் திறக்க முயன்றதுடன், கழிப்பறைக் கதவையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நான்கு பயணிகளும் விமானப் பணிப்பெண்ணும் இணைந்து அவரைக் கட்டுப்படுத்தினர்.
விமானி இந்த விமானத்தைத் திருப்பி லா ரோமைன் நகருக்குக் கொண்டுசென்றார். அங்குக் காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
முப்பது வயதைக் கடந்த அந்த இளைஞர், மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், மற்ற பயணிகளில் பலர் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்ததாக டெஸ்சியேர் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்தபோது விமானத்தில் 13 பயணிகள் இருந்தனர். மேலும், இரண்டு விமானிகளும் ஒரு விமானப் பணிப்பெண்ணும் விமானத்தில் இருந்தனர்.





