மக்களுக்கு காணியை வழங்கிவிட்டு கம்பனிகளுடன் ஒப்பந்தத்துக்கு செல்லுங்கள் - மனோகணேசன்
தோட்டத்தில் வேலை செய்யும் மற்றும் வேலை செய்யாத அனைவருக்கும் அங்கு காணி, வீடுகள் வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதி அட்டனுக்கு சென்றபோது, அட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அரசாங்கம் மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்கிவிட்டு, பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு காணிகளை குத்தகை வழங்கும் ஒப்பந்தத்துக்கு செல்வதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 18-11-2026 அன்று இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மலையக தோட்டங்களில் இருக்கும் தரிசு காணிகளை தனியார் தோட்ட கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஏனெனில் இந்த காணிகள் தனியார் கம்பனிகளின் கீழ் இருப்பதால்தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. மலையக மக்களுக்கு இன்னும் காணி உரிமை வழங்கப்படவில்லை. அந்த மக்களுக்கு காணி உரிமை வழங்கும் நடவடிக்கையைநாங்கள்தான் ஆரம்பித்திருந்தோம். அதனால் நாங்கள் ஆரம்பித்த இந்த பயணத்தை முன்னெடுத்துச் செல்லுமாறே ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.
மலையக மக்களை நாங்கள் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. ஏமாற்றியவர்கள் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் எங்களை சேர்க்க வேண்டாம். அதனால் எமது மக்களை ஏமாற்ற நினைத்தால், அதற்கு நாங்கள் இடமளிப்பதில்லை. ஏனெனில் நாங்கள் யாருக்கும் பயமும் இல்லை, கடனும் இல்லை, எங்களுக்கு பைலும் இல்லை. அதனால் 200 வருடம் இந்த நாட்டுக்காக உழைத்த அந்த மக்களின் பிரஜா உரிமை, காணி உரிமை கிடைத்த பின்பே பூரணமாகிறது என்பதே எமது நிலைப்பாடாகும். அதனால் இந்த காணி உரிமை வழங்கும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய பின்னர், காணி குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு செல்ல வேண்டும்.
எமது மக்கள் தொடர்பில் எங்களுக்கு அக்கறை இருப்பதுபோன்று, இந்த நாடு தொடர்பில் அக்கறை இருக்கிறது. அதனால் நாடு முன்னேற்றம் அடைவதற்கு தொழிற்சாலைகள் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம். இதுதொடர்பில் கலந்துரையாட குழு ஒன்றை அமைத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த குழுவில் எமது பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள நாங்கள் விருப்பம். ஏனெனில் இந்த ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 வருடங்கள் இருக்கின்றன. அதனால் குறித்த குழுவில் மாற்றங்களை மேற்கொண்டு, நாங்களும் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன் அரசாங்கம் மலைய மக்கள் தொடர்பில் தெரிவித்துவந்த விடயங்களை செயற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தோட்டத்தில் வேலை செய்யும் மற்றும் வேலை செய்யாத அனைவருக்கும் அங்கு காணி, வீடுகள் வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதி அட்டனுக்கு சென்றபோது, அட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மலையக மக்களுக்கு தரசு காணிகளை வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இரண்டு வருடங்கள் சென்றும் ஒரு அங்குளமேனும் இருதுவரை வழங்கவில்லை. அதனால் 20 பேர்ச் காணி உரிமை வழங்கி, மலையக மக்களின் காணி உரிமைய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோன்று மலையக மக்களின் அரசியல் கலாசார உரிமைகளில் தோட்ட கம்பனிகள் தலையிடுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அந்த மக்களும் இந்த நாட்டு மக்களாகும். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பிரதேச செயலாளர், கிராமசேவக உத்தியோகத்தர்கள் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறான நிலைமயை மேற்கொண்டால் தோட்டங்களை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்க நாங்கள் தயார்.
மேலும் கடந்த வருட வரவு செலவு திட்டத்தின்போது, மலையக மக்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது, அதற்காக எமது கட்சி வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்தது. ஆனால் 200 ரூபா அதிகரித்து வழங்கிவிட்டு, வேலையையும் அதிகரித்திருந்தது. இது ஏமாற்று நடவடிக்கையாகும். இந்த முறை 200 ரூபா அதிகரிப்பதாக இருந்தால், அதனை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு சென்று அதனை வர்த்தமானிப்படுத்த வேண்டும் என்ற உறுதியை வழங்க வேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் ஜனாதிபதி இதுதொடர்பில் ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை. அதனால் இந்தமுறை அந்த ஏமாற்று நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்ல என்றார்.





