அனோஜனின் விடுதலைக்காக உச்ச தலையீடுகளை மேற்கொள்வேன் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இந்த தவறுக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து நிவாரணம் வழங்கி, அவரை முழுமையாக விடுதலை செய்யுமாறு சவூதி அரேபியாவின் மன்னரிடம் கனிவாகவும் கௌரவமாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக, கட்சி, இனம், மதம் மற்றும் சாதி பேதங்களின்றி தன்னால் இயன்ற உச்சக்கட்ட தலையீடுகளையும் முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்த சிவராசா அனோஜனின் பெற்றோர்களான தம்பிராசா சிவராசா (தந்தை), இராசமாணிக்கம் யோகலட்சுமி (தாய்) மற்றும் அவரது சகோதரரான சிவராசா ஹம்சிதன் ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற சிவராசா அனோஜன், பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற தவறான கருத்துப் பரிமாற்றம் காரணமாகப் பல சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு மரண தண்டனைத் தீர்ப்பைப் பெற்றுள்ளார்.
இச்சந்திப்பின்போதே, இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், அனோஜனின் வழக்கு தொடர்பான முழுமையான விபரங்களைக் கேட்டறிந்தார். மேலும், சவூதி சிறையிலுள்ள அனோஜனுடனும் தொலைபேசி வழியே நேரடியாக உரையாடி அவரது நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரைத் தொடர்புகொண்டு அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச: சிவராசா அனோஜனுக்கு ஏற்பட்ட இந்த தவறுக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து நிவாரணம் வழங்கி, அவரை முழுமையாக விடுதலை செய்யுமாறு சவூதி அரேபியாவின் மன்னரிடம் கனிவாகவும் கௌரவமாகவும் கேட்டுக்கொள்கிறேன். எந்தத் தரப்பிலிருந்தாவது அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவருக்குப் பூரண விடுதலை கிடைக்கும் வரை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.





