டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுடன் ரில்வின் குழுவினர் சந்திப்பு
சிறார்களின் மற்றும் மக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், 30-09-2026 அன்று டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தனர். இச்சந்திப்பில் டெல்லி மாநில கல்வி அமைச்சர் ஆசீஷ் சூத் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, டெல்லி மாநில அரசினால் தற்போதைய காலப்பகுதியில் மக்களின் தேவைகள் மற்றும் நலன்புரி சேவைகளுக்காகவும், டெல்லி நகரின் வளர்ச்சிக்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதான திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட குழுவினர், டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கு தெளிவுபடுத்தினர்.
குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்து சேவையை நிறுவுவதற்காக செயல்படுத்தப்படும் மின்சார பேருந்து திட்டங்கள், மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் மற்றும் அதனுடனான வசதிகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
டெல்லி மாநில அரசு மின்சார பேருந்து போக்குவரத்து அமைப்பை விரிவுபடுத்தி வருவதாகவும், 2026 ஆம் ஆண்டிற்குள் பெருமளவிலான மின்சார பேருந்துகள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. மேலும்,பெண்களின் நலன்புரி, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சுயசார்பை உயர்த்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சிறார்களின் மற்றும் மக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலன்புரி திட்டங்கள் குறித்து டில்வின் சில்வாவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக, நாடு முழுவதும் நிலையான சுற்றுச்சூழல் தூய்மையை ஏற்படுத்துவதற்கும் பொதுமக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன.இச்சந்திப்பானது இரு நாடுகளின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவங்கள் மட்டுமன்றி,மக்கள் நலன்புரி மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.





