2028 இல் இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையாது - பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த
முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர் திட்டங்கள் மூலம் மேலும் 1 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வரவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2028 ஆம் ஆண்டளவில் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என்ற குற்றச்சாட்டுக்கு முன்வைக்கும் தரவுகளும் கருத்துகளும் மக்களைத் தவறாக வழிநடத்துபவை என்றும், தொழில்நுட்ப ரீதியாக முற்றிலும் தவறானது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு கையிருப்பு என்பது கடன்களைச் செலுத்துவதற்கு மட்டும் பயன்படும் நிதி அல்ல; அது நாட்டின் இறக்குமதிகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீராகக் கொண்டு செல்வதற்கான ஒரு பாதுகாப்பு அரணாக செயற்படுகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் வாகன இறக்குமதிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளித்து, கடன் மறுசீரமைப்பையும் சீராக மேற்கொண்டு வருகிறது. வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் திறக்கப்படாமல் இருந்திருந்தால், ஜூன் மாத இறுதியில் இருந்த 6.5 பில்லியன் டொலர் கையிருப்போடு மேலும் 3.5 பில்லியன் டொலர் சேர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதில் தாண்டியிருக்கும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையிடம் தற்போது 6.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு உறுதியாக உள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களில் இந்த கையிருப்பை 8 பில்லியன் டொலராக உயர்த்துவதே அரசின் பிரதான இலக்காகும். 2027 முதல் 2029 வரையிலான ஆண்டுகளில் இலங்கை ஆண்டிற்கு அதிகபட்சமாக 3.8 பில்லியன் டொலர் மட்டுமே கடனாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், தற்போதைய கையிருப்பு நாட்டின் தேவைகளுக்கும் கடன் செலுத்தலுக்கும் போதுமானதாகவே இருக்கும்.
அரசாங்கம் எதிர்பார்க்கும் 8 பில்லியன் டொலர் கையிருப்பு இலக்கை எட்டுவதற்குப் பல வழிகளில் டொலர் வரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் நாட்டின் நடப்புக் கணக்கில் கூடுதலாக 900 மில்லியன் டொலர் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் டிசம்பர் மாதத் தவணையான 350 மில்லியன் டொலர் உட்பட, சர்வதேச வளர்ச்சி அமைப்புகளிடமிருந்து 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி கிடைக்கவுள்ளது. இது தவிர, முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர் திட்டங்கள் மூலம் மேலும் 1 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வரவுள்ளன.
முந்தைய ஆட்சியின் போது நாட்டின் வங்கி அமைப்பின் நிகர வெளிநாட்டு சொத்துக்கள் எதிர்மறை மதிப்பில் இருந்தன. ஆனால், தற்போதைய அரசின் நிர்வாகத்தின்கீழ் ஜூன் மாத தரவுகளின்படி, வங்கி அமைப்பின் வெளிநாட்டுச் சொத்துக்கள் 1,265 பில்லியன் ரூபா (சுமார் 3.8 பில்லியன் டொலர்) அளவுக்கு நேர்மறையான வளர்ச்சியை எட்டியுள்ளன.
கடன்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான பொருளாதார மேலாண்மை காரணமாக, சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் நேர்மறையாக மதிப்பிட்டுள்ளன. எனவே, நாட்டின் பொருளாதாரம் மற்றும் கடன் செலுத்தும் திறன் குறித்து பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எவ்வித வீண் அச்சமும் கொள்ள தேவையில்லை என்றார்.





