குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்
உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தைக் கருத்தில் கொண்டு புதிய சட்டமொன்றை வரைவாக்கம் செய்வதற்காக 2025.08.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 11-08-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில், 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் போது 2024.09.24 ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையால், குறித்த சட்டமூலம் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலாமல் போயுள்ளது. பின்னர் குறித்த சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தைக் கருத்தில் கொண்டு புதிய சட்டமொன்றை வரைவாக்கம் செய்வதற்காக 2025.08.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ந்த வரும் காலங்களில் வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டின் சிப் இற்கு உயிரியில் தரவுகளை உட்சேர்க்கும் முறையை அமுல்படுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு விடயதான அமைச்சின் செயலாளரைப் பெயரிடுவதற்கு, குறித்த சட்டமூலத்திற்கு உகந்த ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்கு 2025.12.10 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ் ஏற்பாடுகளையும் உள்ளடக்கி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.





