அரசியலமைப்புச் சூழ்ச்சியால் நாட்டை பிளவுபடுத்த இடமளிக்கக்கூடாது: சர்வஜன அதிகாரம்
இந்திய ஆதிக்கத்தை இன்றுள்ள அரசாங்கம் வேறு வடிவில் கைக்கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடி வருகின்றது.
பிரபாகரன் 30 வருடங்களாக யுத்தம் செய்து பிளவுபடுத்த முயன்ற இந்த நாட்டை, தற்போதைய அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சூழ்ச்சியின் ஊடாக மீண்டும் பிளவுபடுத்த முயற்சித்து வருவதாகவும், அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அப்போதைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டில் பாரிய இரத்தக் களரி ஏற்பட்டு ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
அன்று இந்திய பேரரசாதிக்கத்துக்கும் சமஷ்டி முறைமைக்கும் எதிராக மக்கள் போராடியபோது, கலைஞர் நந்தா மாலினியின் 'பவன' இசைப்பேழை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அண்மையில் மறைந்த கலைஞர் நந்தா மாலினியின் மறைவுக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்று எதிர்க்கப்பட்ட அதே இந்திய ஆதிக்கத்தை இன்றுள்ள அரசாங்கம் வேறு வடிவில் கைக்கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடி வருகின்றது.
இன்று கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்பது ஓய்வுபெறும் நீதிபதிகளின் சேவைக் காலத்தை அதிகரிக்கும் ஒரு கவர்ச்சிகரமான தலைப்பை முன்னிறுத்தி, அதற்குப் பின்னால் சமஷ்டி முறைமையை இரகசியமாக நுழைக்கும் ஒரு சூழ்ச்சியாகும். அமைச்சரவைச் செயலாளருக்கும் தெரியாத மறைமுக நபரொருவரால் தயாரித்து அமல்படுத்தப்படவுள்ள பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் ஊடாக, பிரபாகரன் 30 வருடங்களாக யுத்தம் செய்து பிளவுபடுத்த முயன்ற இந்த நாட்டை மீண்டும் அரசியலமைப்புச் சூழ்ச்சியால் பிளவுபடுத்த அரசாங்கம் வழிசெய்கின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும்.
அத்துடன், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் எட்டு வெற்றிடங்களை வைத்துக்கொண்டு, பதவி உயர்வுகளுக்காக நீதிபதிகள் அரசியல்வாதிகளை எதிர்பார்க்கும் சூழலை அரசாங்கம் உருவாக்குகிறது.
26 டொலருக்கு எரிபொருள் இறக்குமதி செய்தது, 23 கொள்கலன்கள் விவகாரம் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை திசை திருப்பவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பை விமர்சித்து ஆட்சிக்கு வந்த அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இன்று அதே தவறுகளைச் செய்து நீதித்துறையின் சுயாதீனத்தை சீர்குலைப்பதுடன் ஒற்றையாட்சி முறைமையை தகர்க்க முயல்கின்றது.
மேலும், ஜனாதிபதி அவர்கள் தெற்கிலிருந்து நாகதீபத்துக்கும் திஸ்ஸ விஹாரைக்கும் செல்லும் பக்தர்கள் அநுராதபுரத்தை கடந்து செல்லும்போது வரோதத்தைப் பரப்பவே செல்கிறார்கள் எனக் கூறிய கூற்றே உண்மையான இனவாதமாகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்களைத் திருடிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிய நிஷாந்த சில்வா போன்றவர்களும், சில புலம்பெயர் குழுக்களுமே இந்தப் பிரச்சினையை மீண்டும் உயிர்ப்பிக்க முற்படுகின்றனர்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது எரிபொருள், மின்சாரக் கட்டணம் மற்றும் வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்த பழைய அநுர குமார இன்று இல்லை. எனவே, நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்க மகா சங்கத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.





