பொருளாதார மீட்சியை திசை திருப்புவதற்கு இடமளிக்க முடியாது - ரில்வின் சில்வா
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களின் சகாக்கள் தான் இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறானவர்களை ஒருபோதும் கண்டுக்கொள்ள போவதில்லை.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களின் சகாக்கள் தான் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறானவர்களை ஒருபோதும் கண்டுக்கொள்ள போவதில்லை. பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை திசைத்திருப்புவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் 29-04-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். 2022 ஆம் ஆண்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர்களின் சகாக்கள் மக்களின் அரசியல் மாற்றத்தை விளங்கிக் கொள்ளவில்லை.
பல ஊழல் வழக்குகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் இன்று எமது அரசாங்கத்தையும் ஊழல்மிக்கது என்று காண்பிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.பல போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பத்து அல்லது பதினைந்து பேர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் அரசியல் பின்னணியை முதலில் ஆராய வேண்டும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களின் சகாக்கள் தான் இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறானவர்களை ஒருபோதும் கண்டுக்கொள்ள போவதில்லை.
திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது என்று ஊடகங்களில் குறிப்பிடுபவர்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை திசை திருப்பவே ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.





