நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது யார்? -ரொஹான் எதிரிசிங்க
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
நாட்டுக்கு பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி மறக்கடிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பிரச்சினைகள் பல காணப்படுகின்ற நிலையில் நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிக்க வேண்டும் என்று யார் வலியுறுத்தியது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்கள் துறையின் முன்னாள் சிரேஷ்ட அரசியல் அலுவலரும், அரசியலமைப்பு ஆலோசகருமான ரொஹான் எதிரிசிங்க தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் 19-07-2026அன்று நடைபெற்ற இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நீதியரசர்களின் பதவி நீட்டிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மூன்று பிரதான விடயங்களை சுட்டிக்காட்டி விடயங்களை முன்வைக்கவுள்ளேன்.
தேசிய மக்கள் சக்தி 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டுக்கு பொறுத்தமான வகையில் புதிய அரசியலமைப்பை குறுகிய காலத்துக்குள் உருவாக்குவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தது.
ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் யாப்புறுவாக்கத்துக்கு இதுவரையில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை கூட எடுக்கவில்லை.புதிய யாப்புருவாக்கம் என்பது எளிமையானதொரு காரியமல்ல. ஒட்டுமொத்த மக்களும் யாப்புருவாக்க பணியில் பங்குப்பற்ற வேண்டும்.அது நீண்டதொரு மற்றும் விரிவான நடவடிக்கையாகும்.
பதவியில் இருக்கும் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் புதிய அரசியலமைப்பை ஓரிரு மாதங்களுக்குள் உருவாக்க முடியாது. யாப்பு உருவாக்கம் தொடர்பில் முழுமையான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ கிடையாது. முழு அதிகாரமும் நாட்டு மக்களுக்கே உண்டு.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும். நவீன காலத்துக்கு பொருந்தும் வகையில் அரசியலமைப்பு ஒன்றை இலங்கை தற்போது எதிர்பார்த்துள்ளது.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் பதவி காலம் அரசியலமைப்பு சட்டத்துடன் தொடர்புடையது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை திருத்தம் செய்ய முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஊடாகவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
சமூக கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் நீதியரசர்களின் பதவி காலத்தை அவசரமாக நீட்டிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை மாறுப்பட்ட பல நிலைப்பாடுகளை தோற்றுவித்துள்ளது.பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பது குறித்து யார் கோரிக்கை விடுத்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். சட்டத்தரணிகள் சமூகமோ அல்லது நாட்டு மக்களோ அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றார்.





